Home » இது எப்படி இருக்கு? » போலிகளை நம்பி ஏமாறாதீர்!

போலிகளை நம்பி ஏமாறாதீர்!

fake-idபிரபலங்கள் பெயரில் ஃபேஸ்புக்கில் சில பக்கிகள் இருந்துகொண்டு கொடுக்கும் அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லை பாஸ். இதோ சில அக்குறும்புகள்…

‘அசின் தொட்டும்கல்’ என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் அக்கவுன்ட் செம பிஸி. ‘இன்னிக்கு நான் ‘கஜினி’ ஷூட்டிங்கில் அமீர்கானுடன் நடித்தேன். அருமையான மனிதர் அவர்!’ என ஆரம்பித்து, அடுத்தடுத்த நாட்களில் ‘ஓப்பனிங் ஸாங் ஷூட்டிங்கில் காலில் சுளுக்கு’, ‘இன்று ஜலதோஷத்தால் தும்மிக்கொண்டே நடித்தேன். பாவம் யூனிட்’ என்றெல்லாம் ஸ்டேட்டஸ்கள். ‘ஐயோ, என்ன நடந்தாலும் ஸ்டேட்டஸ் மெசேஜ் போடற அளவுக்கு நம்ம அசின் இம்புட்டு வெள்ளந்திப் புள்ளையா இருக்கே’ என ஆச்சர்யத்தில் திளைத்தார்கள், நட்புக் கோரிக்கை ஏற்கப்பட்ட குஷியில் இருந்த ரசிகர்கள். ‘கெட்வெல் சூன் அசின்’ ‘டேக் டேப்லெட் அண்ட் டேக் ரெஸ்ட்’, ‘ஐயோ அசின். ஒன் வீக் லீவு எடுத்துக்குங்க. நீங்க எங்க பொக்கிஷம்’ என்றெல்லாம் உருகி மருகி உணர்ச்சிவசப்பட்டார்கள். இந்த அசின் அனைத்துக்கும் லைக் கொடுக்க, லேசாக டவுட் வந்து விட்டது. கொஞ்ச நாள் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகள் இல்லாமல் கிடந்த இடம் மீண்டும் புரொஃபைல் அப்டேட்டுகளோடு களைகட்ட ஆரம்பிக்க மீண்டும் ‘ரெடி’ படத்தில் சல்மானுடன் சாப்பிட்டேன், ‘ஹவுஸ்ஃபுல்’ அக்ஷய் ரொம்ப கூல்’ என்று ஸ்டேட்டஸ் போட, மறுபடியும் கூட்டம் கூட்டமாய் லைக்கும் கமென்ட்டும் போட்டார்கள் நம்மவர்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அசினே, ‘அது நான் இல்லை… தயவு செஞ்சு நம்பி ஏமாந்துடாதீங்க’ என பிரஸ் மீட் வைக்கும் அளவுக்குப் போய்விட்டது.

த்ரிஷாதான் ஃபேக் ஐ.டி-யில் செம ஹாட். நம்பும்படி புரொஃபைலை த்ரிஷா கிருஷ்ணன் என மெயின்டெய்ன் பண்ணுவதும் ஸ்டேட்டஸ் போடுவதும், நம்ம ‘ஃபேக் ஐ.டி. த்ரிஷா’வுக்கு வாடிக்கை. இணையதளங்களில் வந்த த்ரிஷா படங்களை டவுண்லோடு செய்து அந்தப் படங்களை சத்தமே இல்லாமல் ரொம்ப நாட்களாக ‘த்ரிஷா கிருஷ்ணன்’ ஷேர் செய்து வந்தார். இதனாலேயே கடுப்பான ஒரிஜினல் த்ரிஷா, தற்போது த்ரிஷ் ட்ராஷர்ஸ் (ட்ராஷ் என்பது த்ரிஷாவுக்கு ஃப்ரெண்ட்ஸ் கேங் வைத்த செல்லப்பெயர்) என மாற்றி வைத்துக்கொண்டார். விடுவாய்ங்களா ப்ளடி ஃபேக் ஐ.டி. கேடீஸ்?! அதேபோல த்ரிஷ் ட்ராஷர்ஸ் என கமகமவென இன்னொரு அக்கவுன்ட்டை ஆரம்பித்து வைத்தான் அந்தப் புண்ணியாத்மா. நாயோடு இருப்பது, சர்ச் பார்க்கில் குட்டைப் பாவாடையோடு சிரிப்பது என கூகுளாண்டவரின் துணையோடு படங்களையும், ப்ளூ கிராஸ், பீட்டா வாசகங்களை ஃபார்வர்டு செய்வதுமாய் ஃபினிஷிங் டச் கொடுக்க, ஒரிஜினல் த்ரிஷாவுக்கு வந்த ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வெஸ்ட்டைவிட அதிகமாக ஹிட்ஸ் அள்ளியது ஃபேக் ஐ.டி.

ஆர்யா இன்னும் ஐயோ பாவம். ஃபேக் ஐ.டி-க்கள் மட்டுமே மூன்று உலாவுகிறதாம். இன்னொரு ஆர்யாவின் ஃபேக் ஐ.டி-யில் இருந்து ஸ்ரேயா, ஆண்ட்ரியா, தமன்னா மற்றும் ஹன்சிகாவுடன் தினமும் பீட்டர் இங்கிலீஷில் கடலை மெசேஜ்கள் போனதாம். அப்படியே நம்பும்படி, ‘ ‘கண்டேன் காதலை’ படத்தில் உன் நடிப்பு சுமார்ப்பா’ என தமன்னாவுக்கும் -‘ஹே பேபி யூ ஆர் ஸோ செக்ஸி’ என ஹன்சிகாவுக்கும் அனுப்பி வைப்பாராம். ஒரு கட்டத்தில் லவ் புரொபோஸ் வரை, போக நேரில் பார்த்து கேட்கும்போதுதான் டரியல் ஆகி விட்டாராம் ஆர்யா. வழக்கம்போல ஜாலியாய், ”என்னைவிட என் ஃபேக் ஐ.டி-க்கள் அழகா புரொஃபைலை மெயின்டெய்ன் பண்ணுறாங்க. அதனால ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்க்கலாம்’னுதான் ஆரம்பத்துல நினைச்சேன். ஒரு கட்டத்துல என் பேரை யூஸ் பண்ணி காலேஜ் பொண்ணுங்ககிட்ட தப்புத்தப்பா பேசுறதா கேள்விப்பட்டு, அப்புறம் ‘நான் அவன் இல்லைங்க’னு சொல்ல வேண்டியதாப் போச்சு. எவ்வளவோ சொல்லியாச்சு பாஸ். ஒரிஜினல் ஜம்ஷத் ஆர்யா பேர்லயே இப்ப இன்னொரு ஃபேக் ஐ.டி. உலாவுது. நல்லா இருங்கய்யா” என்கிறார்.

தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சூர்யா, கார்த்தி, ஜீவா, ஆர்யா, சிம்பு என்று ஃபேக் ஐ.டி-களின் எண்ணிக்கை ஏகத்துக்கும் நீள்கிறது. அட, அவ்வளவு ஏங்க, பவர் ஸ்டாருக்குக்கூட ஃபேக் ஐ.டி. இருக்குன்னா பார்த்துக்குங்களேன்!

-ஆர்.சரண்

Leave a Reply