Home » கொறிக்க... » பெண்ணுலகம் » பிரச்சினைகளை பெற்றோரிடம் பேசத் திணறும் பிள்ளைகள்

பிரச்சினைகளை பெற்றோரிடம் பேசத் திணறும் பிள்ளைகள்

இன்றைய இளைஞர்கள் அறிவியல், தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் வேக வேகமாக முன்னேறி வருகின்றனர்.

பல்வேறு திறமைகளை கைவசம் கொண்ட அவர்களுக்கு தங்கள் சொந்த பிரச்சினைகள் மட்டும் பூதாகரமாக இருப்பது ஏன்? இன்றைய தலைமுறையை சிக்கலுக்குள்ளாக்கும் கேள்வி இதுதான்.

நவீன தலைமுறையினருக்கு தங்களது பிரச்சினைகளை பெற்றோர்களிடம் ஏன் வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை…இதற்கு என்ன காரணம்? அப்படியே திக்கித்திணறி தெரிவித்தாலும் கூட அவை பெரும்பாலும் தோல்வியில் தான் முடிகின்றன. இதற்கு என்னதான் காரணம்?

பெற்றோர்களிடம் இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுக்குள்ள பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்குள் ஒருவித பதற்றம் வந்து தொற்றிக் கொள்கிறது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையாமல் போய்விடுமோ என்ற பயத்தில் தான் அந்த பதற்றம் ஏற்படுகிறது. அந்த மிதமிஞ்சிய எதிர்பார்ப்பில், தாங்கள் சொல்ல வந்த பிரச்சினைகளை மறந்து எதைஎதையோ தவறாக சொல்லி விடுகிறார்கள். அதன்பிறகு, பெற்றோர்கள் தங்களுக்கு சாதகமாக பதில் சொல்வார்கள் என்று பிள்ளைகள் எதிர்பார்த்தால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.


அதேபோல், பிள்ளைகள் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லி விட்டார்களா? அல்லது சொல்ல வந்த விஷயத்தில் எதையாவது மறைக்கிறார்களா என்று பெற்றோர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக, இந்த மாதிரியான நெருக்கடிகள் பற்றி இளைய தலைமுறையினர் யோசிப்பதே இல்லை. காரணம், அவர்களுக்கு `தாங்கள் தான் எல்லாவிதத்திலும், பெற்றோர்களை விட சிறந்தவர்கள். இப்போது உள்ள அறிவியல் சாதனங்கள் அவர்களின் காலத்தில் இல்லை. அதை நாம் தானே பயன்படுத்துகிறோம். அதனால், நமக்குத் தான் எல்லாம் தெரியும்’ என்ற அதிகப்பிரசங்கித்தனமான எண்ணமும் ஒரு காரணமே.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், தங்கள் பிரச்சினைகளை எவ்வாறு பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றே அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுடைய அனுபவங்கள் உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என்பதை நம்புங்கள். அதனால், உங்கள் பிரச்சினைகளை தயங்காமல், எதையும் மறைக்காமல், வெளிப்படையாக எடுத்துக் கூறுங்கள். அப்போதுதான் முழுமையான தீர்வு கிடைக்கும்.

சொல்ல விரும்பும் பிரச்சினையை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், ரத்தினசுருக்கமாக எடுத்துக் கூறுங்கள். என்ன பிரச்சினை? எங்கு நடந்தது? அதற்கு யார் காரணம்? நீங்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்? நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு என்ன? என்பது போன்ற அடிப்படையான தகவல்களை உங்கள் பெற்றோர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

உதாரணத்திற்கு நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள். அதை உங்கள் பெற்றோரிடம் தயங்கி தயங்கி தெரிவிக்கும் போது அவர்கள் மறுத்து விடுகிறார்கள். நீங்கள் கல்யாணம் முடிந்தால் போதும் என்ற அப்போதைய சந்தோஷத்தை எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், உங்கள் பெற்றோரோ, `பிள்ளைகளுக்கு எந்த விதத்திலாவது தீங்கு நேர்ந்து விடுமோ?’ என்று பயப்படுகின்றனர். அதனால்தான், அவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.

பிரச்சினைகள் தலைமுறை இடைவெளியிலோ, அல்லது தகவல் தொடர்பு இடைவெளியிலோ வருவதில்லை. நம்மிடம் தான் உள்ளது. பிரச்சினைகளை எவ்வாறு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டால் போதும். தெளிவு உள்ள இடத்தில் பிரச்சினைக்கு இடமே இல்லை.