குடும்ப உறவுகள் இப்போதெல்லாம் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. பல வீடுகளில் கணவன்-மனைவி உறவு கூட தாமரை இலைத்தண்ணீர் மாதிரி ஒட்டாத நிலையில் தான் காணப்படுகிறது.
தம்பதிகள் இருவரும் வேலைக்குப் போகிறார்கள். வீடு, அலுவலகம் என்று மாறி மாறி பிரச்சினைகளும் சில நேரம் எட்டிப்பார்க்கும். அதை சமாளிப்பதற்குள் சிலருக்கு போதுமடா சாமி என்றாகி விடுகிறது. “நீ ஏன் களைத்துக் காணப்படுகிறாய்?” என்று மனைவியின் வாடிய முகம் பார்த்து கணவன் கேட்பதில்லை. வந்ததில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். “உங்கள் முகத்தில் ஏதோ ஒரு வாட்டம் தெரிகிறதே!” என்று மனைவியும் கேட்பதில்லை. யாருக்கு என்ன பிரச்சினையோ அதை அவர்கள் தான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்கிற மாதிரி ஒரு சூழல் இன்று குடும்பத்திற்குள்ளேயே உருவாகி விட்டது. இதுதான் இன்றைய ஜீரணிக்க முடியாத உண்மை.
அந்த வீட்டில் வேலைக்குப் போகிற தம்பதிகள் ஆரம்பத்தில் எதையும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் அளவுக்கு ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். இரவில் கணவன் வீட்டுக்கு வரும் வரை மனைவி காத்திருந்து சாப்பிடும் நிலை இருந்தது.
ஒருநாள் மனைவிக்கு அதிலும் சோதனை வந்தது. ஒரு நாள் லேட்டாக வந்த கணவன் “இன்றைக்கு நான் என் நண்பர்களுடன் டின்னர் முடித்து விட்டேன்” என்றான். இது மனைவியின் பொறுமையை சோதிப்பதாக அமைந்து விட்டது.
மறுநாளே மனைவியின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அன்றைக்கு மனைவி கணவன் வருவதற்குள் தனியாக சாப்பிட்டாள். கொஞ்ச நேரத்தில் நல்ல பசியுடன் வந்திருந்தான் கணவன். வந்ததும் வராததுமாய் “இரண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்துவை” என்றான். “நீங்கள் சாப்பிடுங்கள். நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டேன்” என்றாள் மனைவி.
அதிர்ந்து போனான் கணவன். ஆனால் மனைவியிடம் எதுவும் கேட்டானில்லை.
இந்த இடத்தில்தான் இரண்டு பேரும் தப்பு செய்கிறார்கள். முதல் நாள் கணவன் வெளியில் சாப்பிட்டு விட்டு வந்ததாக சொன்ன போது, மனைவி மட்டும் காரணம் கேட்டிருந்தால் இந்தப்பிரச்சினை இப்படி சிக்கலில் முடிந்திருக்காது. உண்மையில் கணவனின் நண்பன் ஒருவன் அன்று முன்னறிவிப்பு எதுவுமின்றி தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாட ஆசைப்பட்டான். இந்தப் பெண்ணின் கணவனோ ஆரம்பத்தில் மறுத்துப் பார்த்தான். நண்பர்கள் விடவில்லை. மனைவி மட்டும் அன்று காரணம் கேட்டிருந்தால் கணவன் உண்மையைச் சொல்லியிருப்பான். மனைவிக்கும் அதில் உள்ள நியாயம் புரிந்திருக்கும். ஆனால் கணவன் மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை கணவன் சிதைத்ததாக மட்டும் மனைவி எண்ணிக்கொண்டாள். அதற்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக கணவனுக்கு முன்பே சாப்பிட்டு விட்டாள். இது கணவனை ரொம்பவே உசுப்பி விட்டது. அடுத்தநாள் முதல் அவன் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டே வீடு வரத் தொடங்கினான்.
அதன் பிறகு அந்த கணவன் மனைவியிடம் இருந்த நல்லுறவு விடைபெற்றுக்கொண்டது. காலையில் அலுவலகம் புறப்படும்போது கூட ஏதோ ஒன்றிரெண்டு வார்த்தைகள் பேசிக்கொள்வது கூட அரிதாகி விட்டது.
இப்படிப்பட்ட குடும்பத்தில் நடக்கும் சகல குழப்பங்களுக்கும் காரணம் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பேசாததுதான். உங்க மனைவிக்கு புரமோஷனாமே! இப்படி யாராவது கேட்டால் ஆமாம் என்ற சந்தோஷமாய் சொல்ல வேண்டிய கணவன், அப்போது தான் தெரிந்து கொண்டு அப்படியா என அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு பதில் சொன்னால் எப்படியிருக்கும்?
ஒரு மருமகனுக்கு அவரது மாமா போன் செய்தார். “மருமகனே ஜானகியை இப்ப பத்திரமா வெச்சு தாங்குவீங்கன்னு தெரியும். அடிக்கடி வாந்தி வர்றதால ஒருவாரம் ஆபீசுக்கு லீவு போடச் சொல்லுங்களேன்” என்றார் மாமா. மருமகனுக்கு அதிர்ச்சி. தனது மனைவி தாய்மைப்பேறு அடைந்ததை அவன் இப்போது தான் கேள்விப்படுகிறான். தந்தையாகப் போவதற்காக மகிழ்ச்சியடைவதா, அல்லது இந்த விஷயத்தைக் கூட மனைவி தன்னிடம் மறைத்து விட்டாளே என்று அதிர்ச்சியடைவதா என்பதே அவனது அந்த நிமிட குழப்பமாக இருந்தது. தனக்கும் மனைவிக்கும் இடையே எந்தவித மனப்பகிர்வும் இல்லையென்பது அப்புறம்தான் அவனுக்குள் உறைத்தது. இளமை வேகத்தில் உணர்வுகள் சங்கமிக்கும் அளவுக்கு அவர்களுக்குள் உறவுச்சங்கமம் இல்லை என்பது அவனுக்கு அந்த நிமிடத்தில் வெட்கமாகக் கூட இருந்தது.
இந்த மாதிரி நேரங்களிலாவது யாராவது ஒருவர் இறங்கி வர வேண்டும். இல்லையேல் இவர்கள் மட்டுமின்றி இவர்களின் எதிர்காலச் சந்ததியும் பாதிக்கப்படும். தனக்குத் தெரியாமல் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராமல் வாழ்கிற வாழ்க்கை நிச்சயம் ஒரு நல்ல வாழ்க்கை அல்ல.