நீங்கள் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகரா? நீங்களும் தமிழ் சினிமாவுக்குள் நுழைத்து கலக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கும் படமெடுக்கும் ஆசை இருக்கிறதா? நீங்கள் ஒரு படத்திற்கு கதை எழுத ஆர்வமாக இருக்கிறீர்களா?
அப்படியானால் இதோ உங்களுக்காக தமிழ் சினிமாவின் சில சக்ஸஸ் ஃபார்மூலாக்கள். கீழே உள்ள ஃபார்மூலாக்களை கவனமாக படியுங்கள். தொடர்ந்து படங்களை பாருங்கள். தமிழ் சினிமாவின் சூட்சமத்தை புரிந்து கொள்ளுங்கள்.
ஹீரோ சாதாரண ஆளாக இருப்பார். தனது காதலிக்காகவோ அல்லது வில்லனை பழிவாங்கவோ கடின உழைப்பார். ஒரே பாடலில் மிக உயர்ந்த அந்தஸ்துக்கு வந்துவிடுவார்.
ஹீரோ அல்லது ஹீரோயின் கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். ஆனாலும் அவர்கள் தங்களது வசதிக்கு மீறிய அழகான, ஆடம்பரமான வீட்டில் தான் குடியிருப்பார்கள்.
ஹீரோவுக்கு மூன்று நான்கு நண்பர்கள் இருப்பார்கள். அந்த நண்பர்கள் காமெடியன்களாகதான் இருப்பார்கள். இவர்களோடு ஹீரோயின் நல்ல தோழியாக இருப்பார். ஆனால் இவர்கள் அனைவருமே ஹீரோயினை ஏதாவது ஒரு வழியில் கவர முயற்சிப்பார்கள்.
கிராமத்து கதையாக இருக்கும்போது ஊர் பெரியவர் ஏதாவது முக்கியமான முடிவு எடுப்பார். அப்போது இந்த பதினெட்டு பட்டிக்கும் நான் சொல்ல போவது என்றபடிதான் தனது தீர்ப்பைச் சொல்வார்.
குப்பத்தில் நடக்கிற கதையாக இருந்தாலும் டூயட் பாடல் ஏதாவது வெளிநாட்டில் தான் இருக்கும். கதாநாயகன், நாயகிக்கு பின்னால் நம்மூர் டான்ஸ் மாஸ்டர் புண்ணியத்தில் வெளிநாட்டு நடன அழகிகள் கஷ்டப்பட்டு டப்பாங்குத்து ஆட்டம் போட்டு கொண்டிருப்பார்கள்.
ஒரே மாதிரியாக தோற்றமளிக்கும் இரட்டையர்களில் ஒருவர் நல்லவராக இருப்பார். மற்றொருவர் கெட்டவராகவோ, வில்லனாகவோ இருப்பார்.
கதாநாயகன் திடீரென குஷி மூடில் நடுரோட்டில் ஆட ஆரம்பிப்பார். அவரை வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தில் இருக்கும் ஆண்களும், பெண்களும் நாயகனுடன் ஆடுவார்கள். நாயகன் சொல்லிக் கொடுக்காமலேயே, கதாநாயகனை போலவே அச்சு பிசிறாமல் டான்ஸ் மூவ்மெண்டுகளில் மற்றவர்களும் ஆடுவார்கள்.
கதாநாயகன், வில்லன் ஆட்களுடன் கடுமையாக மோதுவார். வில்லனின் ஆட்கள் அடிக்கும் போது வலித்தாலும் நாயகன் கொஞ்சம் கூட சத்தம் போட மாட்டார். சண்டை முடிந்து வீட்டிற்கு வரும் நாயகனுக்கு ஏதாவது ஒரு பெண் காயத்தை சுத்தப்படுத்துவார். அப்பொழுதுதான் வலிதாங்காமல் ஐயோ… யம்மா என்று ஹீரோ முணங்குவார்.
வில்லனின் ஆட்கள் எலக்ட்ரானிக் டிஸ்பிளே உள்ள டைம்பாம்மை வைப்பார்கள். அதில் சம்பந்தமே இல்லாமல் சிவப்பு நிற சிறிய லைட்டுகள் மினுமினுக்கும். டிஸ்பிளேயில் குண்டு வெடிக்கப்போகும் நேரம் குறைந்து வருவதை ஒளிப்பதிவாளர் க்ளோஸப்பில் காட்டுவார். அதிலிருந்தே இன்னும் சில நொடிகளில் நாயகன் வெடிகுண்டை கண்டு பிடித்து விடுவார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஏதாவது ஒரு பொது இடத்தில் வெடிகுண்டை தீவிரவாதிகள் வைத்து விடுவார்கள். கடைசி நேரத்தில் அதை கண்டுபிடித்து விடும் நாயகன் அதை செயலிழக்க வைக்க முயல்வார். தம் கட்டி கொண்டு குண்டில் இருக்கும் வயர்களை பிரித்து பார்ப்பார். பின்னணியில் திகில் இசையை கொடுப்பார் இசையமைப்பாளர். கடைசியில் ஒரு வயரை வெட்டிவிடுவார். நாயகன் சொல்லி வைத்தது போல வெடிகுண்டை செயல் இழக்க வைக்கும் வயர் அதுவாக இருக்காது. குண்டு வெடிக்காது. ஹீரோ நிம்மதி பெருமூச்சு விடுவார்.
சில நேரங்களில் ஹீரோ ஒரு கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக இருப்பார். வில்லன் ஆட்கள் அவரது குடும்பத்தை அழித்து விடுவார். இதனால் வெகுண்டு எழும் ஹீரோ தனது பதவியை உதறிய பின்புதான் வில்லனை பழிவாங்குவார். சில நேரங்களில் ஹீரோவை வில்லன் தனது செல்வாக்கால் சஸ்பெண்ட் ஆக செய்து விடுவார். இதற்கு பிறகே தனியாளாக வில்லனை பழிவாங்குவார் ஹீரோ.
சீக்கிரமே திரும்பி வந்துடுறேன் என்று கூறிவிட்டு கிளம்பும் கதாபாத்திரம் சொன்ன நேரத்தில், சொன்னபடி வராது. இதனால் ஒரு பதட்டம் உண்டாகும்.
ஹீரோவோ அல்லது வில்லனோ ஏதாவது ஒரு நேரான ரோட்டில் காரை ஓட்டுவார்கள். ரோடு நேராக இருந்தாலும் தேவையில்லாமல் அவ்வப்போது கார் ஸ்டீயரிங்கை திருப்பி ஓவர் ஆக்டிங் செய்வார்கள்.
ஹீரோவை வில்லனின் ஆட்கள் தாக்க வருவார்கள். பல பேர் தாக்க வந்தாலும் ஹீரோவை ஒருவர் தாக்க வந்து, அவர் அடிபட்ட பின்பே அடுத்தவர் ஹீரோவை தாக்க வருவார். மற்றவர்கள் அதுவரை எங்கே இருப்பார்கள் என்பதே தெரியாது.
இரவு நேரத்தில் விளக்குகளை அணைக்கும் காட்சிகளில் ஹீரோவோ, ஹீரோயினோ அல்லது வேறு யாராவது விளக்குகளை அணைத்து விடுவார்கள். ஆனாலும் பெட்ரூமில் நடக்கும் எல்லா விஷயங்களும் நம் கண்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் நீல நிறத்தில் தெரியும்படி காண்பிப்பார்கள்.
க்ரைம் சம்பந்தப்பட்ட விசாரணை காட்சிகளில் ஒரு காட்சியிலாவது விசாரணை என்ற பெயரில் ஸ்டீரிப் க்ளப்பிற்கு வரும் காட்சி நிச்சயம் இடம் பெற்று இருக்க வேண்டும்.
-இரா.ரவிஷங்கர், குமுதம்-