பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு அந்த சிரிப்பு மனிதரின் ஓவியம் நன்கு அறிமுகமானதாகும். மற்றவர்களின் தகவல், கருத்துகளை வேடிக்கையாக மறுதலிக்கும் சந்தர்ப்பங்களில் அந்த விநோத சிரிப்பு மனிதர் ஓவியம் குறியீடாக பயன்படுத்தப்படுவதுண்டு.
ஆனால், அந்த ஓவியம் வெறும் கற்பனை ஓவியமல்ல. உண்மையாக வாழும் ஒருவரின் முகத்தேற்றமே அது. உலகின் முன்னணி கூடைப்பந்தாட்ட வீரர் முகத்தோற்றத்தில் வரையப்பட்டதுதான் அந்த ஓவியம்.
யோ மிங் (Yao Ming) எனும் இவ்வீரர் சீனாவைச் சேர்ந்தவர். 1980 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு 32 வயது. இதற்கிடையில் பெரும் பணமும் புகழும் சம்பாதிதது விட்டு உபாதைகள் காரணமாக போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
பொதுவாக சீனர்கள் குள்ளமானவர்கள் என்ற அபிப்பிராயம் உள்ளது. ஆனால், யோ மிங்கின் உயரம் 7 அடி 6 அங்குலம் (2.29 மீற்றர்).
யோமிங்கின் தாய் தந்தை இருவரும் தொழிற்சார் கூடைப்பந்தாட்ட போட்டியாளர்கள். தந்தை யோ ஸியுவானின் உயரம் 6 அடி 7 அங்குலம். தூய் பெங் பெங்டியின் உயரம் 6 அடி 3 அங்குலம். இத்தம்பதியின் ஒரே பிள்ளையான யோ மிங் 9 வயதில் கூடைப்பந்தாட்டம் விளையாட ஆரம்பித்தார். 10 வயதில் அவரின் உயரம் 5 அடி 5 அங்குலமாக இருந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 7 அடி 3 அங்குலம் வரை வளர்வார் என எதிர்வுகூறினர். ஆனால் அதையும் தாண்டி வளர்ந்துகொண்டிருந்தார் யோ மிங்.
அவரின் உயரம்போலவே அவரின் கூடைப்பந்தாட்ட ஆற்றலும் உயர்ந்தது. சீனாவின் சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி பல பதக்கங்களை வென்றார். 2002 ஆம் ஆண்டு முதல் 2011 வரை அமெரிக்க தேசிய கூடைப்பந்தாட்ட சங்கத்தின் (என்.பி.ஏ.) போட்டிகளில் ஹொஸ்டன் ரொக்கெட் அணி சார்பில் பங்குபற்றினார்.
காலில் ஏற்பட்ட உபாதைகள் காரணமாக 2011 ஆம் ஆண்டு தொழிற்சார் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். அவர் ஓய்வு பெறும்போது என்.பி.ஏ. போட்டிகளில் விளையாடும் வீரர்களில் மிக உயரமானவராக யோ மிங் விளங்கினார்.
சீனாவின் மிகப் பிரபலமான விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான யோ மிங் 2009 வரையான 6 வருடகாலத்தில் 5 கோடி அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருமானத்தை பெற்றவர். பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் அனுசரணையை அவர் கொண்டிருக்கிறார்.
இதெல்லாம் இருக்கட்டும் யோ மிங் எவ்வாறு மேற்படி சிரிப்பு மனிதராக சமூக வலைத்தளங்களில் மாற்றம் பெற்றார் என்ற கேள்வி எழுகிறதா?
2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டியொன்றின் பின்னர் சக வீரர் ரொன் ஆட்டெஸ்ட் சகிதம் யோ மிங் பங்குபற்றினார். அப்போது ரொன் அட்டெஸ்ட் பேசியதை கேட்டு, அடக்க முடியாமல் சிரித்தார். அந்த காட்சி அடங்கிய வீடியோ இணையத்தளங்களிலும் வெளியானது.
2010.07.11 ஆம் திகதி ரெடிட் எனும் சமூக வலைத்தளத்தில் டவுன்லோ கலைஞர் ஒருவர் பல்வேறு வேடிக்கை ஓவியங்களை வரைந்து வெளிட்டார். அதில் யோவ் மிங்கின் ஓவியமும் ஒன்றாகும். மேற்படி செய்தியாளர் மாநாட்டு வீடியோவில் யோ மிங் சிரித்த காட்சியொன்றின் “ஸ்கிறீன் ஷொட்டை” அடிப்படையாக வைத்தே அந்த ஓவியத்தை வரைந்ததாக டவுடன்லோ ஒப்புக்கொண்டார்.
அந்த ஓவியத்தின் வேடிக்கையான சிரிப்பு பலரையும் ஈர்த்தது. பின்னர் அதன் சாயலில் வேறு ஓவியங்களும் வரையப்பட்டன. யோ மிங்குக்கும் இது. தெரியும்.
அவரின் பேஸ் பக்கத்தை 13 இலட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.