ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த 30 வருடங்களாக தன்னுடன் வாழும் தனது மனைவியை விவாகாரத்து செய்யப்போவதாக அறிவித்தமை ரஷ்யாவிலும் உலக அரங்கிலும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவாகரத்து அறிவிப்பின் பின்னணியில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையொருவர் இருக்கலாம் என்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அவரின் மனைவி லியூட்மிலாவும் விவாகரத்துச் செய்யவுள்ளதாக கடந்த வியாழனன்று அறிவித்தனர்.
பல்லட் நடன நிகழ்ச்சியொன்றை இணைந்து பார்வையிட்ட இத்தம்பதியினர் ரஷ்ய தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியின்போதே தாம் விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தனர்.
தானும் மனைவியும் சந்திப்பதுகூட அரிதாக உள்ளதாகவும் இருவரும் தனித்தனியாக வாழ்ந்துவருவதாகவும் புட்டின் தெரிவித்தார். இதை அவரின் மனைவி லியூட்மிலாவும் ஆமோதித்து பேசினார்.
ரஷ்ய ஜனாதிபதியொருவரிடம் விவாகரத்து செய்யப்போகிறீர்களா என தானாக முன்வந்து கேள்வி கேட்பதற்கு அந்நாட்டு செய்தியாளர்கள் துணிந்திருக்க மாட்டார்கள் எனவும் இக்கேள்வியும் பதிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருக்கலாம் எனவும் மேற்குலக ஊடகங்கள் விமர்சிக்கின்றன.
ரஷ்யாவில் தம்பதிகள் விவாகரத்து அதிகமாகவுள்ளது. ஆனால், கடந்த 3 நூற்றாண்டுகளில் ரஷ்ய அரச தலைவர்கள் எவரும் பதவியிலிருக்கும்போது விவாகாத்து செய்ததில்லை. அதனால் புட்டினின் விவாகரத்து செய்தியை ரஷ்ய மக்கள் பலர் முதலில் நம்ப மறுத்தனர்.
55 வயதான லியூட்மிலா முன்னாள் விமானப் பணிப்ணொவார். 60 வயதான விளாடிமிர் புட்டின், சோவியத் யூனியனின் உளவு அமைப்பான கே.ஜி.பியில் பணியாற்றியவர் அவர் கிழக்கு ஜேர்மனியில் கே.ஜி.பி. தலைவராக பணியாற்றச் செல்வதற்கு சிறிதுகாலத்துக்குமுன் 1983 ஆம்ஆண்டு லியூட்மிலாவை திருமணம் செய்துகொண்டார். நாட்டின் முதற்பெண்மணியாக விளங்கியபோதிலும் பொதுமக்கள் முன்னிலையில் லியூட்மிலா தோன்றுவது அரிதாக இருந்தது.
ரஷ்ய தலைவர்களில் மிகைல் கொர்பசேவ் தவிர வேறு யாரும் தமது மனைவியை பொது நிகழ்ச்சிகளுக்கு அதிகமாக அழைத்து வந்ததில்லை.
விளாடிமிர் புட்டின் தற்போதைய உலக நாடுகளின் தலைவர்களில் சற்று வித்தியாசமான ஒருவர்தான். ஜனாதிபதியான பின்னரும் திறந்த மார்புடன் குதிரைசவாரி செய்தல், மீன்பிடித்தல், ஜூடோ விளையாட்டில் ஈடுபடுதல், பரசூட்டில் இறங்குதல், பனிச்சறுக்கலில் ஈடுபடுவதுடன் அவற்றை புகைப்படம் பிடித்து வெளியிடவும் அனுமதித்தவர் அவர்.
ஆனால் அவர் தனது குடும்பத்தினரை முன்னிலைப்படுத்தவில்லை. அவரின் மனைவி பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளவில்லை. புட்டினுக்கு 20:30 வயதான இரு மகள்கள் உள்ளனர். ஆனால் ரஷ்யர்கள்கூட அவர்களை கண்டிருக்க மாட்டார்கள்.
எவ்வாறாயினும் புட்டினின் காதலிகள் குறித்து தகவல்கள் அல்லது வதந்திகள் வெளிவந்த வண்ணமே இருந்தன. குறிப்பாக மேற்குலக ஊடகங்களில் இத்தகைய செய்திகள் அதிகம் வெளியாகின. அச்செய்திகளை புட்டின் திட்டவட்டமாக நிராகரித்திருந்தார்.
இப்போது 30 வயதான ரஷ்ய முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபெயேவாவை திருமணம் செய்வதற்காகவே புட்டின் தனது மனைவியை விவாகாரத்து செய்துள்ளார் என கூறப்படுகிறது.
யார் இந்த அலினா கபயேவா?
1983 ஆம் ஆண்டில் பிறந்த அலினா கபெயேவா. 12 வயதில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பித்தார். உடலை அற்புதமாக வளைக்கும் ஆற்றல் கொண்ட அலினா, இசையொருங்கு ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த வீராங்கனையாக விளங்குகிறார்.
2000 சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தையும் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். இவை தவிர உலக ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப் போட்டிகளில் 14 பதக்கங்களையும் ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டிகளில் 25 பதக்கங்களையும் வென்றவர்.
ஜிம்னாஸ்டிக்கில் ஒலிம்பிக், உலக சம்பியன்ஷிப், ஐரோப்பிய சம்பியன்ஷிப், உலக கிண்ணப் போட்டிகள், கிராண்ப்றீ போட்டிகள் அனைத்திலும் சம்பியன் பட்டம் வென்ற 3 இசையொருங்கு ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளில் ஒருவர் இவர்.
24 வயதில் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர் மொடலாகவும் பணியாற்றியவர். படுகவர்ச்சியான போஸ்களை கொடுத்த அவர், தற்போது ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினாக பதவி வகிக்கிறார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஐக்கிய ரஷ்யா கட்சியிலேயே எலினா கபெயேவாவும் அங்கம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கெபயேவாவுடன் புட்டினுக்கும் இடையிலான “நட்பு” குறித்து 2008 ஆம் ஆண்டு “இதார் டாஸ்” எனும் ரஷ்ய பத்திரிகை செய்தி வெளியிட்டது.
அடுத்த 6 நாட்களில் அந்நிறுவனமே மூடப்பட்டுவிட்டது. அந்நிறுவனத்தின் உரிமையாளரான கோடீஸ்வரர் அலெக்ஸாண்டர் லெபேதேவ், புட்டினுடன் மோதுவதற்கு விரும்பவில்லை.
எனினும் புட்டினுக்கும் அலினாவுக்கும் தொடர்பிருக்கிறது என்ற கதைகள் ஓய்ந்துவிடவில்லை. 3 வருடங்களுக்கு முன் புட்டின் மூலம் அலினா ஆண் குழந்தையொன்றை பெற்றார் எனவும் தற்போது அவருக்கு 6 மாத வயதுடைய பெண் குழந்தையொன்று இருப்பதாகவும் அமெரிக்காவின் நியூயோர்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
தற்போது ஜனாதிபதி புட்டினின் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதையடுத்து அலினாவை அவர் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.எனினும் இச்செய்திகளை புட்டினும் அலினாவும் நிராகரித்துள்ளனர்.
விளாடிமிர் புட்டின் மீண்டும் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை எனவும் அவர் தனது வாழ்க்கையை தொடர்ந்தும் ரஷ்ய ஜனாதிபதியாக அர்ப்பணிக்கவுள்ளார் எனவும் விளாடிமிர் புட்டினின் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
புட்டின் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்பது வெறும் வதந்தியே எனவும் புட்டினின் பணி அட்டவணையை பாத்தால் அவருக்கு குடும்ப வாழ்வில் ஈடுபட நேரமில்லை என்பது சாதாரண கண்களுக்குகூட தெரியும் எனவும் திமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். இவற்றில் எது உண்மை என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.