கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் வெளிவந்த படம் பேசும் என்ற படத்தின் விளம்பரம் வன்முறையின் உச்சமாக இருந்ததை கவனித்திருக்கலாம். ஒரு பெண்ணின் முகத்தில் காலை வைத்து தரையோடு அழுத்தி ரோஜாப்பூ கொடுக்கும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் சமீபமாக வருகிற படங்களில் பொறுக்கியான நாயகன் பள்ளிக்குப் போகும் பெண்ணை காதலிப்பதாகவே காட்சிகள் வருகின்றன. வம்படியாக தனக்குப் பிடித்த பெண்ணை அடைய நினைக்கும் அடாவடி வன்முறையை ஹீரோயிசமாக காட்டுகிறார்கள். டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவியை பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்த கும்பலுக்கும் இன்றைய தமிழ்ப்பட ஹீரோவுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
இப்படியொரு சீரழிவின் முற்றிய வெளிப்பாடாகவே படம் பேசும் விளம்பரத்தை பார்க்க முடிகிறது. பெண்ணின் முதுகில் கத்தியால் லவ் மீ என்று கீறி காட்டுவதும், முகத்தில் காலை வைத்து அழுத்தி பூ தருவதும் எந்தவகை ரசனை என தெரியவில்லை.
இந்தப் படத்தை நாயகன், நாயகி இருவரை மட்டும் வைத்து பை 2 என்ற படத்தை இயக்கிய ராகவா இயக்குகிறார். ஷக்தி, பூர்ணா நடிக்கிறார்கள்.
போஸ்டரே இப்படி வக்கிரமாக இருந்தால் படம் எப்படி இருக்கும்?