பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலை கட்டட விபத்தில் சிக்கிய ரேஷ்மா பேகம் (19 வயது) என்ற பெண் 17 நாட்களின் பின்னர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று அண்மையில் உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் ஒரு போலியான நாடகம் எனவும் இதில் ரேஷ்மா பேகமுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவருடன் உடைந்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய சக ஊழியர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் இடம்பெற்ற மேற்படி விபத்தில் 1221 பேர் உயிரிழந்ததுடன் 2500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்விபத்து இடம்பெற்று 17 நாட்களின் பின், மார்ச் 10 ஆம் திகதி இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதாக பரபரப்பான செய்தி வெளியானது. எனினும், இடிபாடுகளில் சிக்கிய 17 நாட்களின் பின்னர் ரேஷ்மாவை மீட்பது போல நாடகம் அமைக்கப்பட்டு பிரபல்யம் தேடப்பட்டுள்ளதாக இப்போது கூறப்படுகின்றது.
இது குறித்து மேற்படி தகவலை வெளியிட்டுள்ள ஆண் ஊழியர் கூறுகையில், “நானும் ரேஷ்மா பேகமும் ஒன்றாகவே இடிபாடுகளிலிருந்து தப்பித் தோம். பின்னர் இருவரும் 2 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றோம். ஆனால் திடீரென ரேஷ்மா மறைந்துவிட்டார்.
இதன் பின்னர் நான் ரேஷ்மாவைக் பார்த்தது, 17 நாட்களின் பின்னர் இடிபாடுகளிலிருந்து அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டதாக தொலைக்காட்சியில் காண்பிக்கும் போதுதான். ஆனால் அது ஒரு போலியான விடயம்” எனத் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை பங்களாதேஷைச் சேர்ந்த ஷிசிர் அப்துல்லா என்ற ஊடகவியலாளரே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டட இடிபாடுகளுக்குள் 17 நாட்கள் ரேஷ்மா சிக்கியிருந்ததாக கூறப்பட்டபோதிலும் அவர் மீட்கப்பட்டபோது ஆடை அதிக அழுக்கடையாமல் இருந்தமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.