Home » குட்டிக்கதைகள் » சேதி

சேதி

காட்டுக்குள் நடந்தார், ஒரு சந்நியாசி. இரண்டு கால்கள் உடைந்துபோன ஒரு நொண்டி நரியை அங்கே கண்டார். ‘ஐயோ, உணவுக்கு இந்த நரி என்ன செய்யும்!’ என்று கவலைப்பட்டார்.

அப்போது, சிங்கம் ஒன்று தான் வேட்டையாடிய இறைச்சியை இழுத்து வந்து நரியின் அருகில் போட்டது. கடவுள் அவருக்கு ஏதோ சேதி சொன்னது போல் இருந்தது.

தனக்கான உணவு கிடைக்க வேண்டுமானால், அதை எப்படியும் தெய்வம் கிடைக்கச் செய்யும் என்று முடிவு செய்தார். உணவு தேடுவதை விடுத்து, கடவுளை நினைத்து ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டார்.

நாட்கள் உருண்டன. பசி முற்றியது. யாரும் அவருக்கு உணவு கொண்டு தரவில்லை. 18 நாட்களில் சக்தி எல்லாம் இழந்தார். பரிதாபமாகச் சுருண்டு கிடந்தார்.

அந்தப் பக்கம் யோகி ஒருவர் வந்தார். நடந்ததை விசாரித்து அறிந்தார்.

”கடவுள் உனக்கு ஒரு சேதி சொன்னது உண்மைதான். ஆனால், மற்றவருடன் உணவைப் பகிர்ந்துகொண்ட அந்தச் சிங்கம் போல் வாழச் சொன்ன சேதியை, நரி போல் வாழச் சொன்னதாகத் தப்பர்த்தம் செய்துகொண்டது நீதான்” என்றார்.

Leave a Reply