Home » குட்டிக்கதைகள் » மூன்று கேள்விகள்

மூன்று கேள்விகள்

ஒருவன் சாக்ரடீஸிடம் வந்தான்.

‘‘குருவே, உங்கள் மாணவன் ஒருவனைப் பற்றிச் சொல்ல வேண்டும்’’ என்றான்.

‘‘சொல். ஆனால், அதற்கு முன் உன்னிடம் மூன்று கேள்விகள் கேட்பேன். அதற்கு விடையளித்துவிட்டுச் சொல்’’ என்று சொன்ன சாக்ரடீஸ், தன் முதல் கேள்வியைக் கேட்டார்.

‘‘நீ சொல்லப் போகும் விஷயம் உண்மைதானா?’’

‘‘ம்ம்… இல்ல… தெரில… ஒருத்தர் என்கிட்ட சொன்னாரு.’’

‘‘அப்போ உனக்குத் தெரியாது. சரி, இரண்டாவது கேள்வி. நீ சொல்லப் போவது, அந்த மாணவனைப் பற்றி நல்ல விஷயமா?’’

‘‘ம்ம்… இல்ல.. அது வந்து..’’

‘‘அப்படியானால், ஒரு கெட்ட விஷயத்தைச் சொல்லப் போகிறாய். அதுவும் உண்மையா இல்லையா என்று உனக்குத் தெரியாது. சரி, மூன்றாவது கேள்வி. நீ சொல்லப்போகிற விஷயத்தினால் எனக்கு ஏதாவது உபயோகம் இருக்கிறதா?’’

‘‘அப்படிச் சொல்ல முடியாது…’’

‘‘உண்மையில்லாத, உபயோகமில்லாத ஒரு கெட்ட செய்தியை நான் கேட்டு, என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. நீயும் யாரிடமாவது ஏதாவது சொல்வதற்கு முன், இந்தக் கேள்விகளை யோசித்துக் கொள்’’ என்றார் சாக்ரடீஸ்.

Leave a Reply