Home » குட்டிக்கதைகள் » அனுபவம் தரும் பாடம்

அனுபவம் தரும் பாடம்

புத்தர் சீடர்களில் ஒருவர் வாழ்வில் நடந்த அனுபவம் இது. ஆனந்தன் என்பது அவர் பெயர். ஒருநாள் பொட்டல்காடு வழியே ஆனந்தன் நடந்து சென்று கொண்டிருந்தார். கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. நாக்கு வறண்டதால் பருக தண்ணீர் கிடைக்குமா? என்று தேடினார். அருகில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு சென்றார்.

அப்போது சிறிது தூரத்தில் ஒரு பெண் தண்ணீர் குடத்துடன் வருவதைக் கண்டார்.

“அம்மா! தாகத்தால் நான் வருந்துகிறேன். கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் அந்தப் பெண் திடுக்கிட்டாள்.

“சுவாமி! நான் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவள். நான் எப்படி தண்ணீர் தர முடியும்?” என்றாள்.

அதற்கு நான் தண்ணீர் தானே கேட்டேன். உங்கள் சாதியைப் பற்றி கேட்கவில்லையே? என்றார் ஆனந்தன்.

இதைக் கேட்டதும் அந்தப் பெண் வியப்படைந்தாள். முற்றும் அறிந்த மகான்கள் சாதியை பொருட்டாக மதிப்பதில்லை. மனிதர்களாக பிறந்த அனைவரும் ஒன்றே என்பதை அறிந்து கொண்டாள். உடனே தான் கொண்டு வந்த குடத்திலிருந்து தண்ணீரை எடுத்து அவருக்கு பருக கொடுத்தார். ஆனந்தனும் அந்த பெண்மணிக்கு நன்றி தெரிவித்துவிட்டு தன் பயணத்தை தொடங்கினார்.

நீதி: மக்கள் அனைவரும் சமம். மனிதர்களில் உயர்வு தாழ்வு இல்லை, என்கிற நீதியை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Leave a Reply