வாழ்க்கையில் எப்போதும் டென்ஷனா? மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? சிகிச்சை பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா? கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்? ஆம்.. உங்கள் வாழ்க்கைத் துணையிடமே உள்ளது மருந்து. வாழ்க்கைத் துணையை அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் சுமார் 51 தம்பதிகளிடம் இது குறித்த ஆய்வை நடத்தினர். எப்படிப்பட்ட பணி அமைப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும், அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்களாக இருந்தாலும், வாரத்தில் பல முறை துணையைக் கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, உடலுறவுக் கொள்வது போன்றவற்றில் ஈடுபடும் தம்பதிகளுக்கு மனு அழுத்தம் குறைந்திருந்தது.
இது வெறும் கண்துடைப்பு ஆய்வு மட்டுமல்ல. அதாவது அறிவியல் ரீதியாகவும் இதனை ஆய்வு செய்தவர்கள் விளக்குகிறார்கள். WD அதாவது, அலுவலக பிரச்சினைகள், வீட்டு பிரச்சினைகள் என எதையும் தங்களது படுக்கை அறைக்குள் நுழைய விடாமல், வாழ்க்கைத் துணையை அன்பாக நடத்தும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரப்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே, நெருக்கத்தை உருவாக்கியப் பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்ததாகவும் கூறியுள்ளனர். வெறும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மட்டும் நமது வாழ்க்கைத் துணையைக் கட்டிபிடிப்பதால் எந்த பயனும் இல்லை. இருவருமே மனம் ஒருமித்து, தங்களது அன்பை வெளிக்காட்டும் விதமாக நெருக்கமாக இருப்பதால்தான் உண்மையான பலன் கிட்டும். இதையும் புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் ஆய்வு மேற்கொண்ட பீட் டிட்சன்.