காலையில் எழும்போதே பல நாட்களாக செய்யாமல் வைத்திருக்கும் வேலையை “இன்று எப்படியேனும் செய்து முடிப்பேன்” என்று அன்றைய தினம் செய்ய முயற்சி செய்யுங்கள்.
வீட்டில் எல்லோருடனும் அன்பாக பழகுங்கள். முடிந்தால் வீட்டிலுள்ளவர்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து அவர்களின் நன் மதிப்பைப் பெறலாம். முயற்சி செய்யுங்கள்.
வயதானவர்கள் வீட்டிலிருந்தால் அவர்களுடன் அவர்களின் உடல்நிலை பற்றியோ, அவர்களின் பழைய நாட்களை நினைவு படுத்தியோ சிறிது நேரம் அவர்களுடன் பேசுங்கள்.
சிறிய சிறிய விஷயங்களுக்கெல்லாம் டென்ஷனாகாமல் ஆற, அமர யோசித்துச் செயல்படுங்கள். இதனால் உங்கள் உடல் நிலையும் கெடாமலிருக்கும்.
எதையும் மனதிற்குள்ளேயே வைத்து மருகாமல் வீட்டிலுள்ளவர்களிடம் கூறி அவர்களின் எண்ணத்தையும் அறிந்து அதற்கு மேல் எது சரியாகப் படுகின்றதோ அதைச் செய்யுங்கள். அதே சமயம் விஷயத்தை பெரிதுபடுத்தாமல் விரைவில் சரிபடுத்த முயற்சி செய்யுங்கள்.
“மௌனம் சர்வார்த்த ஸாதகம்” அதாவது சில விஷயங்களில் மௌனமாக இருந்து விடுவதே சாலச் சிறந்தது.
குடும்பத்தினரின் பிறந்தநாள், திருமண நாள் இவற்றை நினைவுவைத்துக் கொண்டு மறக்காமல் அவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். சக்திக்கேற்ற பரிசுகளையும் கொடுங்கள். இதனால் அவர்கள் சந்தோஷப்படுவதோடு, உங்களுக்கும் சந்தோஷம் ஏற்படும்!