நீ குளித்து ஓடி வரும் நீரில் பூத்துக் குலுங்கும் சின்னப் பூந்தோட்டம்தான் ஊரிலேயே அழகான இடம்.
திருநாட்களிலும், திருவிழாத் தருணங்களிலும் மட்டும் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்துபோகிற அம்மன் நீ. கோயிலில் சற்று நேரம் நீ உட்கார்ந்துவிட்டு எழுந்து போகும் இடத்தை மூன்று முறை சுற்றி வந்து… வெகுநேரம் அங்கேயே கிடக்கிற நாய்க்குட்டிகள் நாங்கள்.
ஊரில் தேர்த் திருவிழா என்றால் எங்களைப் பிடிக்க முடியாது. அன்றுதான் நாள் முழுவதும் உன்னைப் பார்க்கலாம் நாங்கள். தேர் கூடவே நான்கு வீதிகளும் வருவாய் நீ. அப்போதெல்லாம்… ஐம்பது பேர் வடம்பிடித்து இழுத்துப்போகும் தேரிலிருக்கும் தெய்வத்தை விட்டுவிட்டு… ஐந்நூறு பேரின் இதயங்களை இழுத்துப்போகும் உன்னை மட்டுமே தரிசிக்கும் எங்கள் கண்கள்.
ஆனால்… உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது உள்ளூர் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டாயாம்.கேள்விப்பட்டு… அதிர்ச்சியில் ஊரே உறைந்துபோய்விட்டது. அப்புறம் நீ எங்கோ வாக்கப்பட்டும் போய்விட்டாய்.
வாழாவெட்டியாகிவிட்டது ஊர்!
புத்தர் இந்த உலகத்தில் தோன்றி
ஒரு மார்க்கத்தைத்தான்
அமைத்துக் கொடுத்தார்.
நீயோ என் எதிரில் தோன்றி
எனக்கொரு உலகத்தையே
அமைத்துக் கொடுத்துவிட்டாய்
என் மனதைக் கொத்தி கொத்தி
கூடு கட்டி
குடியும் ஏறிவிட்ட
மனங்கொத்திப் பறவை நீ
நீ உன் முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கி விடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்க வந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்.
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்ததும்
சிலையாக நின்று விடுகிறேன்.
நான் எப்போது
உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்து விட்டேன்.
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லவேண்டும் என்கிற
ஞாபகம் கூட எனக்கு வரவில்லை.
உன்னை எப்படித்தான் உன் வீடு தாங்குகிறது?
நீ சிரிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
நீ குளிக்கும்போது என்ன செய்யும் உன் வீடு?
அதைவிட
நீ தூங்கும்போது என்னதான் செய்யும் உன் வீடு?
கடவுள் குடியிருக்கக் கோயிலாகக்கூட
இருந்துவிட முடியும்!
ஆனால்,
நீ குடியிருக்க வீடாக இருப்பது
முடியவே முடியாது என்பதை
நிரூபித்துக்கொண்டே இருக்கிறது |
நீ குடியிருக்கும்
என் இதயம்!
காதல்தான்
நான் செய்யும் தவம்.
என் கடுந்தவத்தைக் கலைத்து
என்ன வரம் வேண்டும் என்று
எந்தத் தெய்வமும்
என்னைக் கேட்காமலிருக்கட்டும்.
என் தவத்தைவிடச்
சிறந்ததாய்
எந்த வரத்தையும்
எந்தத் தெய்வத்தாலும்
தந்துவிட முடியாது!
ஒரே ஒரு முறைதான்
எனினும்
உன் உன்னத நிழல்
என்மீது பட்ட போதுதான்
நான் ஒளியூட்டப்பட்டுக்
கவிஞனானேன்!
தபூசங்கர்-