Home » கொறிக்க... » கட்டுரைகள் » ஏன் தனிமை?

ஏன் தனிமை?

சிலருக்கு எப்போதுமே தனிமை பிடித்த விஷயம். மணிக்கணக்கில் தனிமையில் இருக்க விரும்புவார்கள்.

எதற்கு தனிமை? தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்கிற மாதிரி எதற்காக தீவு மாதிரி மற்றவர்களிடம் இருந்து துண்டித்துக்கொள்ள வேண்டும்?


கேள்விகளை இதுமாதிரியான தனிமை விரும்பிகளிடம் கேட்டால் இவர்களிடம் இருந்து உடனடியாக பதில் வராது. அமைதி காப்பார்கள். அந்த அமைதிக்குப் பின்னால் ஒரு ஆழமான சோகம் இருக்கும். அது என்னவென்று அத்தனை சீக்கிரம் வெளிப்படுத்திவிட மாட்டார்கள்.

மற்றவர்களிடம் தங்களின் விஷயங்களை சொல்லும்போது அது வெளியரங்கமாகி இன்னும் விபரீதத்தை ஏற்படுத்தும். அதன்பிறகு நாம் தவறாக விமர்சிக்கப்படுவோம் என்கிற அவமானத்தை தவிர்க்கிற போக்கே பயத்துக்கு காரணம்.

சரி, மனம் விட்டுப்பேச ஒருவர் கூடவா இல்லாமல் போய் விடுவார்கள்? இருப்பார்கள். ஆனால் இவர்கள் மனம் விட்டுப் பேசினால் தானே. பொதுவான விஷயம் பேசுவார்கள். நாட்டு நடப்பு பற்றிக்கூட அவ்வப்போது விசாரித்துக் கொள்வார்கள். அதே நேரம் தங்கள் விஷயம் என்று வரும்போது மட்டும் வாயை இறுக மூடிக் கொண்டு விடுவார்கள்.

ஒரு விஷயத்தை சரியா, தவறா என்று கணிப்பதில் ஏற்படுகிற குழப்பமே இவர்களின் விஷயங்களை இருட்டுக்குள் தள்ளி வைக்கின்றன. விடை வராத கணக்கை போட்டுப் போட்டுப் பார்த்து கால நேரத்தை வீணடிக்கிற மாதிரி தீர்க்கமுடியாத விஷயங்களை தங்களுக்குள்ளாக போட்டுப்போட்டு குழம்பிக்கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களில் பலர் தங்கள் மனைவி, பிள்ளைகளிடம் கூட இது விஷயமாய் கலந்து பேசமாட்டார்கள். இதுமாதிரியான அணுகுமுறைகளில் ஒரு நாள் திடீரென பிரச்சினை வெடித்து கடைசியில் அமளிதுமளியில் கொண்டு விட்டுவிடும். அதோடு இவர்களால் ஒட்டுமொத்த குடும்பமும் மீட்பு இல்லாமல் அவதிப்படுகிற நிலைமையும் ஏற்பட்டு விடக்கூடும் சிலர் இருக்கிறார்கள்.

பேசினாலே வம்பு என்று நினைத்துக்கொள்கிற ரகம் இவர்கள். பல நேரங்களில் அமைதி விரும்பிகளாகவே இருந்து விடுவார்கள். ஆனால் இவர்களிடம் விஷயம் இருக்கும். எப்போது எங்கே பேச வேண்டுமோ அங்கே கட்டாயம் இவர்கள் குரல் நேரத்துக்கு ஒலிக்கும்.

இது நிச்சயமாக ஆபத்தில்லாத அமைதி. தேவையில்லாத நேரங்களில் எல்லாம் எதற்கு வீணாகப் பேசி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற ரகமாக இவர்கள் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் மற்றவர்கள் பேசுவதை கேட்டுக் கொள்வார்கள். அதில் தங்கள் கருத்தை சொல்லாவிட்டாலும் அதில் உள்ள சாராம்சத்தை கிரகித்துக்கொண்டு விடுவார்கள். அது மட்டுமின்றி ஒருவர் அதிகம் பேசுவதால் எந்த மாதிரியான புதுப்புது பிரச்சினைகளில் சிக்குகிறார்கள் என்பதையும் அவர்களால் சட்டென கிரகித்துக் கொண்டுவிட முடிகிறது.

சிலருக்கு நண்பர்கள் அமைய மாட்டார்கள். தவறிப்போய் அப்படி அமைந்தாலும் அதை ஸ்டெடி பண்ணிக்கொள்ளத் தவறி விடுவார்கள். இவர்கள் டேஸ்ட்டுக்கும் நண்பர்கள் டேஸ்ட்டுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அதனாலும் தனிமைப்படுத்தப்படும் இவர்கள் அதையும் நல்லதுக்கென்றே எடுத்துக் கொள்வார்கள். வீட்டில் இருந்து ஆபீஸ், ஆபீஸ் விட்டால் வீடு என்கிற உணர்வைக் கொண்டிருக்கிற பலரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான்.

கலகலப்பாக பேசுவது என்பது சிலருக்கு கைவந்த கலை. ஒரு வீட்டுக்குள் இப்படி கணவன்-மனைவி இருவரில் ஒருவர் கலகலப்புப் பேர்வழியாகவும் அடுத்தவர் அமைதி விரும்பியாகவும் இருந்தால், வீட்டில் ஒரு வித அசாதாரண அமைதி குடிகொண்டிருக்கும். கலகலப்புக்கு மவுனம் ஆட்சி செய்கிற இடத்தில் பெரும்பாலும் வேலை இருக்காது.