Home » கொறிக்க... » தபூ சங்கர் பக்கம் » கன்னுக் குட்டி…

கன்னுக் குட்டி…

ஏழு வருடங்கள் கழித்து ஊருக்கு வருகிறேன். இப்போது நீ எப்படி இருப்பாயோ? என் அத்தை மகள் நீ. அப்பா இல்லாதவளாகையால் உன் அம்மாவோடு சின்ன வயதிலிருந்தே எங்கள் வீட்டில்தான் இருக்கிறாய். மாமா மாமா என்று என்மீது உயிரையே வைத்திருப்பாய்.

பத்தொன்பது வயதில் வேலைக்காக நான் வெளிநாடு கிளம்புகையில்… அழுதபடியே சென்னை வரை வந்து என்னை வழியனுப்பியபோது, உனக்கு வயது பதின்மூன்று.

ஊரிலிருந்த காலங்களில்… நான் கடைத்தெருவுக்குப் போயிருந்தால்கூட, வாசலிலேயே காத்திருந்து என்னைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக்கொள்கிற கன்னுக்குட்டி நீ.

ரெண்டு கழுதை வயசாகுது… இன்னும் என்னடி மாமனக் கொஞ்சுற. யாராவது பாத்தா என்ன நெனப்பாங்க? என்று உன் அம்மா திட்டினால், எத்தனை கழுத வயசானாலும் என் மாமனக் கொஞ்சுவேன். யார் பாத்தா எனக்கென்ன? ஊரு பாத்துக்க ஒரு முத்தம்… உலகம் பாத்துக்க ரெண்டு முத்தம்…. சாமி பாத்துக்க மூணு முத்தம்… என்று என்னை முத்தமிடுவாய். கடைவீதியிலிருந்து நான் உனக்கு வளையல் வாங்கி வந்திருந்தால் உனக்கு வளையல் வேணுமா..? மாமா வேணுமா? என்பேன். எனக்கு மாமாதான் வேணும் என்று என்னைக் கட்டிக் கொள்வாய்.

வெளிநாட்டில் இருக்கும்போது, வீட்டிலிருந்து வரும் கடிதங்களை நீதான் எழுதியிருப்பாய். Ԧamp;#2990;ாமா… உன் கன்னுக்குட்டி எழுதறேன் என்றுதான் ஆரம்பிப்பாய். ஆனால், ஒரு வருடம் கழித்து வந்த கடிதங்கள் நீ எழுதியவை என்றாலும், அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது என்று ஆரம்பித்திருந்தன.

அப்புறம் ஒரு நாள் டவுனுக்கு வந்த அப்பா, என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய போதுதான் தெரிந்தது… நீ வயதுக்கு வந்துவிட்டாய் என்பது. அதன் பிறகு, இன்றுவரை உன் கடிதத்தில் ஒன்றில்கூட உன்னைப் பற்றி ஒரு வரிகூட இல்லை… உன் கையெழுத்தைத் தவிர. கடைசியாக எல்லாருக்கும் என்னென்ன வேண்டும் என்று எழுதியிருந்த கடிதத்தில்கூட உனக்கென்ன வேண்டும் என்று நீ எழுதவே இல்லை.

விமான நிலையத்தில் உன்னைத் தேடினேன். அப்பா மட்டும்தான் இருந்தார். வீட்டு வாசலில் உன்னை எதிர்பார்த்தேன். நீ இல்லை. வீட்டுக்குள் ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு என்னைப் பார்த்தாய். நான் பார்க்காத மாதிரி இருந்தேன். எல்லோரிடமும் நலம் விசாரித்து விட்டு, அவரவர்களுக்கு வாங்கி வந்ததை எல்லாம் கொடுத்து முடித்த போது, என் அம்மாதான் கேட்டார், என்னடா குட்டிக்கு ஒண்ணும் வாங்கிட்டு வரலையா? என்று.

குட்டியா… யார் அது? என்றேன்.

என்னடா இப்படிக் கேக்கற… உன் அத்தை மகடா? ஓ அவளா? மறந்துட்டேனே… லெட்டர்ல எழுதியிருக்கலாம்ல என்று நான் சொல்லி வாய் மூடுவதற்குள்… நீ ஓடிப்போய் கிணற்றில் குதித்து விட்டாய்.

தூக்கி வந்து, அறிவு கெட்ட முண்டம்… நான் மறந்திட்டேன்னு சொன்னா நீ நம்பிடுவியா? பெரிய மனுஷியானா அப்படியே எல்லாத்தை யும் மாத்திப்பீங்களோ? அரை மணிநேரம் நான் கடைத்தெருவுக்குப் போயிட்டுத் திரும்பி வந்தாலே ஓடிவந்து கட்டிப் பிடிச்சிக்கிறவ நீ, இப்ப, இத்தனை வருஷம் கழிச்சி வர்றேன்… ஆனா, கதவுக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு யாரோ மாதிரி பாக்குற… என்னோட கன்னுக்குட்டியா இருந்தா இப்படி பண்ணுவியா நீ? என்றேன்.

இல்ல மாமா… இல்ல மாமா. தெரியாமப் பண்ணிட்டேன் மாமா! நான் உன் கன்னுக்குட்டிதான் மாமா! என்று அழுதபடி ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டு… ?ஊரு பாத்துக்க ஒரு முத்தம்… உலகம் பாத்துக்க ரெண்டு முத்தம்… சாமி பாத்துக்க மூணு முத்தம்..!? என்று முத்தமிட்டபடி அழுதாய்.

திறக்காத ஒரு பெட்டியைக் காட்டி இதோ பார்… உனக்காக என்னவெல்லாம் வாங்கி வந்திருக்கேன் என்றேன்.

அதெல்லாம் எனக்கு ஒண்ணும் வேணாம். எனக்கு நீதான் மாமா வேணும் என்று என்னை இறுக்கிக்கொண்டு அழுதாய்… முற்றிலும் என் கன்னுக்குட்டியாக மாறி!

என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?
என்றா கேட்கிறாய்.
நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்.
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!

இந்தக் காதல் கடிதம்
கொண்டு வருபவனைக்
காதலிக்கவும்.
இவன் உனக்காகப்
படைக்கப் பட்டவன்.
இப்படிக்கு
இறைவன்

உன் அழகு
வெட்டி வைத்திருந்த
ஆழ்துளைக் கிணற்றில்
விழுந்த சிறுவன் நான்.

உன் வீட்டுத் தோட்டத்தில் வைத்த
பச்சை ரகத் தென்னங் கன்று
வளர்ந்து மரமானதும்
செவ்விளநீர் காய்த்ததாமே
நீ குளித்த நீரில் வளர்ந்த மரம்
அப்படித்தானே காய்க்கும்!
 
தபூ சங்கர்-

Leave a Reply