Home » கொறிக்க... » வாழ்க நலமுடன் » மனிதனின் உள, உடல் நலனை மேம்படுத்தும் யோகா!

மனிதனின் உள, உடல் நலனை மேம்படுத்தும் யோகா!

யோகா என்பது மனிதனின் உள, உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தக்கூடிய ஆன்மீகத்துடன் விஞ்ஞானம் சேர்ந்த ஒரு கலை.

யோகம் என்பது மனிதனானவன், இறைவனை உணர்ந்து இறைவனுடன் ஒன்றறக் கலத்தலையே குறிக்கின்றது.

இப்பயிற்சி நெறியினால் தனி மனித ஒழுக்கம், வாழ்க்கை, சிந்தனை, அறிவாற்றல் வளப்படுத்தப்படுகின்றது.

யோகாவின் மூலம் மனிதன் உலகத்தின் இன்பங்கள் முதல் இறுதி மூச்சு உள்ள வரை அனைத்தினையும் பெறமுடியும்.

இதன் அதிசயத்தக்க பலன்கள் காரணமாகத்தான், உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த அற்புதக் கலையை பயின்று வருகின்றனர்.

இக்கலையானது அவர்களின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஒன்றாகவும் இருப்பதைக் காண முடிகிறது.

யோகாவானது 4 வகைப்படுகின்றது. ஜனன யோகா, பக்தி யோகா, கர்ம யோகா, ராஜ யோகா ஆகியவையே அவை.

பன்னெடுங் காலந்தொட்டு நமது ஞானிகள் வாழ்வின் உயர்நிலையை அடையும் பொருட்டு யோகாவினைத் தாமும் பயிற்சி செய்து வந்துடன் உலகுக்கும் தந்தருளினர்.

ஞானிகளின் வழியில் யோகக் கலை

ஞானிகளின் வழியே யோகக்கலையை உலகுக்கு பயிற்றுவிக்கவந்தவர்களில் ஒருவரே குருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி.

இவர் 2002 ஆம் ஆண்டு சென்னையில் Infinite Dimensions Charitable Trust என்ற அமைப்பினை ஸ்தாபித்தார்.

இவ்வமைப்பானது யோகா, தியானம், பிரபஞ்ச சக்தி மூலம், பிணிகளைக் குணப்படுத்தல் போன்ற பலவகையான சேவைகளை வழங்கி வருகிறது.

குருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி இந்தியாவின் பிரபல தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி (Indian Institute Of Technology) இன் இலத்திரனியில் பொறியியல் பட்டதாரியாவார்.

யோகக் கலையினால் ஈர்க்கப்பட்ட குருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி, தமது வாழ்க்கையை யோகக்கலைக்காகவே அர்ப்பணித்த ஒருவர்.

குருஜி யோகாச்சார்யா, சுவாமி விஷ்ணு தேவானந்தா அவர்களின் நேரடிச் சீடராவர். சுவாமி விஷ்ணு தேவானந்தா சிவானந்த யோகத்தினைப் பின்பற்றுபவராக இருந்தார்.

குரு விஷ்ணு தேவானந்தா இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து யோகாச்சார்யா குமார்ஜி, அவரின் பணியை முழுமூச்சாகத் தொடர்ந்து ஆற்றினார்.

குருஜி யோகாச்சார்யாவின் கருத்துப்படி யோகாவானது, உடலின் வெளியுறுப்புக்களை மட்டுமன்றி உள் உறுப்புக்களையும் சீர்படுத்துகின்றது.

அரிய பயிற்சிக் கலை

உடல் மற்றும் உள்ளத்தினை தூய்மைப்படுத்தும் ஓர் அரிய பயிற்சிக் கலை இது என்றால் கூட அது மிகையல்ல.

தனது யோகக்கலையினை பல நாடுகளிலும் பயிற்றுவித்துவரும் குருஜி, பல பிரபல நிறுவன ஊழியர்களுக்கும் யோகாவின் பலன்களை உணர்த்தியுள்ளார்.

இலங்கைக்கு கடந்த மார்ச் மாதத்தில் விஜயம் செய்த யோகாச்சார்யா அருண்குமார்ஜி சின்மயா மிஷனுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறார்.

யோகக்கலையை தனது முழுமூச்சாகக் கொண்டு இலங்கையில் அதனை பரப்பிவருகின்றார்.

யோகாச்சார்யா அருண் குமார்ஜியிடம் யோகப் பயிற்சிகளைப் பெற விரும்புபவர்கள் சின்மயா மிஷனின் இலங்கைக் கிளையுடன் தொடர்பை ஏற்படுத்தி இணைந்து கொள்ள முடியும்.

யோகா எனும் அற்புதக் கலையினை நாமும் கற்றும் இப்பிறவியின் முழுப்பலனையும் பெற்று உய்வோமாக.

-ச.கவிந்தன்