என்னடா! கல்யாணத்துக்குப் பிறகு ஒழுங்காயிருப்பேல்லே? குடி, கூத்து எல்லாத்தையும் விட்டுடணும். ஆமா… சொல்லிப்புட்டேன்! என்றாள் சாவித்திரி.
சரிம்மா! சத்தியமா இனி குடிக்க மாட்டேம்மா!
உங்கப்பா செய்யாத சத்தியமாடா? முத நாளு ராத்திரி சூடம் கொளுத்திச் சத்தியம் பண்ணிட்டு, மறு நாளு காலையிலேயே தள்ளாடிட்டு வருவாரு. உன் பேச்சையெல்லாம் என்னால நம்ப முடியாதுடா! நீ இன்னிக்கே குடியை நிறுத்தற டாக்டர்கிட்ட வர்றே!
நான்தான் சொல்றேன்ல! டாக்டர்லாம் வேணாம்! என்னால நிறுத்த முடியும்ன்ற நம்பிக்கை இருக்கு!
இதப் பாருடா! இனிமேலாவது அங்க இங்க மேயறதையும் நிப்பாட்டு!
அதான் சொல்லிட்டேனில்லே! நான் திருந்திட்டேம்மா!
என்னமோப்பா! நேத்து நாம பார்த்துட்டு வந்த பொண்ணு கலகலப்பாவே இல்லே. அவங்க அம்மாவும் அப்பாவும்தான் நம்ம சம்பந்தத்துலே ஆர்வம் காட்டினாங்க.
பின்னே? கல்யாணச் செலவெல்லாம் நாமே செய்யறதா சொல்லிட்டமே!
அப்போது தொலைபேசி கிணுகிணுக்க, சாவித்திரியே ஒலிவாங்கியை எடுத்தாள்.
நேத்து பொண்ணு பார்க்க வந்தீங்களே, அந்தப் பொண்ணுதாம்மா பேசறேன்!
அடேடே! உனக்கு நூறு ஆயுசு. இப்பதான் உன்னை நெனைச்சேன். அதுக்குள்ளே நீயே பேசுறே. சொல்லும்மா.
அம்மா! நான் இப்ப சொல்லப் போறதைக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க. நாங்க விசாரிச்சவரையிலே உங்க மகனைப் பத்தி நல்ல விஷயம் எதுவும் காதுக்கு வரலே! எங்கப்பாவே அது பத்தி உங்ககிட்ட கேட்டதுக்கு, கால் கட்டுனு ஒண்ணு போட்டுட்டா எந்த ஆம்பளையும் திருந்திடுவான். என் மகன் திருந்துறதுக்கு நான் ஜவாப்தாரிզ#2985;ு சொன்னீங்களாம். ஒருவேளை, திருந்தலைனா?
அப்படிச் சொல்லாதேம்மா… அதுக்கு நான் பொறுப்பும்மா!
இருங்க. இன்னும் நான் பேசி முடிக்கலே. அப்படியே உங்க மகன் திருந்தினாலும், கல்யாணத்துக்கு முந்தி நடந்த தப்பெல்லாம் இல்லைனு ஆயிடுமா? என் மேல கோபப்படாம முழுக்கவும் கேளுங்க. ஆம்பளைங்களே திருந்துவாங்கனா, பொம்பளைங்களும் கட்டாயம் திருந்துவாங்கதானே? அதனால உங்க மகனுக்கு ரெட் லைட் ஏரியாவிலிருந்து…
அப்படினா?
அதாங்க, விபசார விடுதி! அங்கேருந்து மகளிர் மேம்பாட்டு மையத்தால் விடுவிக்கப்பட்ட ஒரு பொண்ணு இருக்கா. அந்த மையத்தோட தலைவி, அது மாதிரிப் பொண் ணுங்களுக்கெல்லாம் நல்ல உள்ளம் படைச்ச ஆம்பளைங்களாப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. உங்க மகன் அந்தப் பொண்ணைப் பார்க்க ஏற்பாடு பண்ணட்டுமா? ஹலோ… ஹலோ… என்னது பேச்சு மூச்சே காணோம்!
ஜோதிர்லதா கிரிஜா-
© 2008, ↑ ilaignan.com
NTamil.com | Newstamil.com | Ilaignan.com | Kisukisu.com | Tamilnadutoday.com | Tamildaily.com