அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடியும் ஹொலிவூட்டின் கவர்ச்சி நடிகையாக விளங்கிய மர்லின் மன்றோவும் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் இரகசியமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
1960 ஆம் ஆண்டு தனது 42 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோன் எவ். கென்னடி, அமெரிக்காவின் ஒரேயொரு ரோமன் கத்தோலிக்க, ஜனாதிபதி, இரண்டாம் உலக யுத்தகால படை வீரர், புலிட்ஸர் விருது வென்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி, இன சமத்துவத்தில் ஆர்வம் கொண்டவர், கறுப்பினத்தவர்களுக்கு சமவுரிமையளிக்கும் சட்டமூலத்தை முன்வைத்தவர் முதலான பல்வேறு காரணங்களால் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜனாதிபதியாக விளங்கினார்.
1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் பதவியிலிருக்கும் போதே சுட்டுக்கொல்லப்பட்டமை உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. ஆனால், ஜக்குலினை திருமணம் செய்தி ருந்த ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி, அக்காலத்தில் புகழ் பெற்ற ஹொலிவூட் நடிகையாக விளங்கிய மர்லின் மன்றோவுடன் உறவு கொண்டிருந்தாக கூறப்படும் தொடர்புகள் கென்னடியின் வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு வழிவகுத்தன.
இப்போது ஜோன் எவ். கென்னடி, மர்லின் மன்றோ இருவரின் பாலியல் உறவுகளும் இரகசிய ஒலிப்பதிவு சாதனங்களின் மூலம் பதிவுசெய்யப்பட்டிருந்தது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
1950 மற்றும் 60களில் அமெரிக்காவின் பிரபல தனியார் நிறுவன உளவாளியாக விளங்கிய பிரெட் ஒட்டாஷ் என்பவர் எழுதிவைத்த குறிப்புகளில் மேற்படி பாலியல் சம்பவத்தின் ஒலிப்பதிவை தான் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
பிரெட் ஒட்டாஷ் 1992 ஆம் ஆண்டு காலமானமை குறிப்பிடத்தக்கது. இரு தசாப்த காலமாக களஞ்சிய அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரெட் ஒட்டாஷின் இரகசிய கோவைகளை அவரின் மகளான கொலினின் மூலம் கண்டதாக ஹொலிவூட் ரிப்போர்ட்டர் எனும் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
1960களில் அமெரிக்க ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சியும் கடும் போட்டிகள் நிலவியவேளையில் இரு தரப்பினரும் மறுதரப்பின் தவறு கள், ஒழுங்கீனங்களை அம்பலப்படுத்துவதற்கு போட்டியிட்டனர்.
ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி உட்பட ஜனநாயகக் கட்சியினரின் திரைமறைவு செயற்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்காக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஹோவார்ட் ஹியூஸ், மற்றும் ரிச்சர்ட் நிக்ஸன் சார்பில் பணிக்கு பிரத்தியேக உளவாளியாக பிரெட் ஒட்டாஷ் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கென்னடியும் மர்லின் மன்றோவும் கலிபோர்னியா மாநிலத்தின் மாலிபு நகரிலுள்ள நடிகர் பீட்டர் லோபோர்ட்டின் வீடொன்றில் பாலியல் உறவுகொண்ட காட்சி வீடியோவில் பதிவுசெய்யப்பட்டதை ஒட்டாஷ் கேள்விப்பட்டாராம். கென்னடியின் சகோதரி பட்ரிஷியாவை திருமணம் செய்திருந்தவர் நடிகர் லோபோர்ட்.
அவ்வீட்டில் இடம்பெற்ற உளவு நடவடிக்கை குறித்து ஒட்டாஷ் எழுதிவைத்துள்ள குறிப்பில், “மர்லின் மன்றோ மேற்படி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. ஜனநாயகக்கட்சியினர் என்ன செய்கிறார்கள் என அறிவதற்காக ஹோவார்ட், நிக்ஸன் ஆகியோர் சார்பாக கண்டறிவதே அத்திட்டமாகும். மர்லின் மன்றோ ஒரு பக்க விளைவுதான்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த பாலியல் சம்பவத்துக்கு முந்திய காலக் குறிப்புகள், ஜனாதிபதி கென்னடியை பாலியல் வலையில் சிக்க வைப்பதற்கு மர்லின் மன்றோ முயற்சித்ததைக் காட்டுகின்றனவாம்.
“மர்லின் ஒரு மினி தொலைபேசி கேட்டல் கருவியொன்று வேண்டுமென்றார். அக்கருவியை பிராவில் மறைத்துவைத்துக்கொள்ள முடியும். மைக்ரோ போன் கருவியானது கைக்கடிகாரத்தின் வடிவில் இருக்கும்” என ஒட்டாஷ் தெரிவித்துள்ளார்.
1962 ஓகஸ்ட் 5 ஆம் திகதி தனது 36 ஆவது வயதில் மர்லின் மன்றோ உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா கொலை செய்யப்பட்டாரா என்பது ஹொலிவூட் வரலாற்றின் நீண்டகால சர்ச்சைகளில் ஒன்றாகும்.
அவர் சிலரால் திட்டமிடப்பட்ட வகையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கூறப்பட்டதுடன் இது தொடர்பாக பல்வேறு கதைகள் உலாவின. ஆவற்றுள் சில கதைகள் ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடி, அவரின் சகோதரர் ரொபர்ட் எவ்.கென்னடி தொடர்பானவையாகும்.
மர்லின் மன்றோ இறப்பதற்கு முன்னர் அவரால் இறுதியாக தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்ட நபர் ஜனாதிபதி கென்னடிதான்.
மர்லின் மன்றோ இறந்த தினத்தில் மன்றோவுக்கும் ஜனாதிபதி ஜோன் எவ் கென்னடியின் சகோதரர்களில் ஒருவரான ரொபர்ட் கென்னடி ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக புதிதாக வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோன் எவ்.கென்னடி மற்றும் அவரின் சகோதரர்களின் மீதும் மர்லின் மன்றோ பாலியல் உறவு கொண்டிருந்ததாகவும் தான் “ஓர் மாமிசத் துண்டுபோன்று பரிமாறப்படுவதாக” மர்லின் மன்றோ விமர்சித்தார் எனவும் ஒட்டாஷ் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியரான மிமி அல்பிரெட் என்பவர் தனது கடந்த வருடம் வெளியிட்ட நூலொன்றில் தான் 19 வயது யுவதியாக இருந்தபோது ஜனாதிபதி கென்னடியுடன் அந்தரங்க தொடர்புகள் ஆரம்பமானமை குறித்து தெரிவித்திருந்தார். கென்னடியின் இளைய சகோதரரான டெட் கென்னடி உட்பட ஏனைய ஆண்களுடன் பாலியல் சேவைகளை வழங்குமாறு ஜனாதிபதி கென்னடி இரு சந்தர்ப்பங்களில் கோரியமை குறித்து அந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.
பொபி கென்னடி எனவும் அழைக்கப்பட்ட ரொபர்ட் கென்னடியும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1968 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.