பிரிட்டனைச் சேர்ந்த 12 வயதான சிறுவனொருவன் அபுதாபிக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில், பயணம் செய்வதற்கு அஞ்சுவதால் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்ப முடியாமல் ஒருவருட காலமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிர்க்கதியாகியுள்ளான்.
ஜோ தொம்ஸன் எனும் இச்சிறுவன் கடந்த வருடம் தனது பெற்றோருடன் அபுதாபிக்குச் சென்றான். கடந்த வருடம் ஜூன் மாதம் இச்சிறுவன் திரும்பவிருந்தான். எனினும், மீண்டும் விமானத்தில் பயணம் செய்வதற்கு அஞ்சுவதாக அச்சிறுவன் தெரிவித்ததால் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெளியேற முடியாமல் உள்ளான்.
இச்சிறுவனுடன் தாயகம் திரும்புவதற்கு அவனின் பெற்றோர் நான்கு தடவைகள் விமான நிலையத்துக்குச் சென்றனர். ஆனால், ஒவ்வொரு தடவையும் அவன் விமானத்தில் ஏறவே முடியாது என அடம்பிடித்து கண்ணீர் விட்டு அழுதான்.
பின்னர் தரைவழியாகவோ கப்பல் வழியாகவோ பயணம் செய்வதற்கும் மறுப்பு தெரிவித்தான். அதனால் அவன் தனது தந்தை டொனி தொம்ஸனுடன் சுமார் ஒரு வருடமாக அபுதாபியில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
63 வயதான டொனி தொம்ஸன் தனது மகனுடன் அபுதாபியில் தங்குவதற்கு மாதாந்தம் சுமார் 3000 ஸ்ரேலிங் பவுண்களை செலவிடுவதால் வங்குரோத்தாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
எந்த வகையான பயணத்துக்கும் மறுப்பு தெரிவிக்கும் ஜோ தொம்ஸனின் அச்சத்துக்கான காரணத்தை உளவியல் நிபுணர்கள் கண்டறியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.