அவுஸ்திரேலியாவில் மேரி குண்ட்ரம் என்ற பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு மூக்கிற்கு அருகில் இருந்த மூளை தற்பொழுது சத்திர சிகிச்சையின் பின் அகற்றப்பட்டு உரிய இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பெண்ணுக்கு கர்ப்பம் தரித்து சில மாதங்களுக்குப் பிறகு தான், வயிற்றில் குழந்தையின் குறைபாடு தெரிய வந்தது. இது தொடர்பாக இணையத்தில் ஆராய்ந்த போது, அவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அத்தகைய குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் சில மணி நேரங்களிலேயே இறந்து விடும் என்பது தான் அது.
குழந்தையின் அசாதாரண தன்மை தாயின் வயிற்றில் ஐந்து மாத கருவாக இருந்தபோது தான் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால், குறையை சரி செய்ய அப்போது இயலவில்லை.
மூக்கின் வழியாக வெளிவந்த மூளையுடன் பிறந்த டோம்னிக்கிற்கு உடனடி உயிர் ஆபத்து ஏதுவும் ஏற்படவில்லை என்றாலும், மூளை வெளியே இருந்ததால் விரைவாக நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்தனர்.
ஏழு மாதம் முடிவடைந்த நிலையில் குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்ய முடிவு செய்தனர் மருத்துவர்கள். பின்னர், அதில் உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்தனர்.
பொஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களின் முயற்சியால் சத்திர சிகிச்சை மூலம் இவரது மூளையை மண்டையோட்டுக்குள் உரிய இடத்தில் வைத்து தைத்து சாதனை புரிந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக இதே போன்று செய்யப்பட்ட சத்திரசிகிச்சை ஒன்றிற்கு கிட்டத்தட்ட 20 மணி நேரம் பிடித்ததாகவும் ஆனால், டோம்னிக்கிற்கு கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் சுமார் 36 வகையான படிகளின் முறைமையில் இந்த சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக பெருமையுடன் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.