ஆளில்லா ரஷ்யாவின் ரொக்கெட் ஒன்று 3 செயற்கைகோள்களுடன் கஸகஸ்தானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை ஏவுகையில் நச்சு எரி வாயுவை வெளியிட்டவாறு வெடித்துச் சிதறியுள்ளது.
ரஷ்யாவுக்குச் சொந்தமான ஆளில்லா ரொக்கெட், கஸகஸ்தானில் அமைந்துள்ள ரஷ்ய ரொக்கெட் ஏவுதளத்தில் வைத்து காலை 8.38 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இதன் போதே சற்றும் எதிர்பாராத விதமாக ரொக்கெட் வெடித்துள்ளது.
குறித்த ரொக்கெட் வெடித்துச் சிதறியதில் ஏவுதளம் முழுவதும் நெருப்பினால் மூடப்பட்டுள்ளது. இக்காட்சியினை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
ஆனால் இவ்விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ரொக்கெட் ஏவப்படும் போது பல ஏவுதள பணியாளர்கள் நிலத்தின் கீழுள்ள பதுங்கு அறையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ரஷ்யாவின் ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி இந்த விபத்தில் ஏவுதளத்திற்கு பாதிப்புக்களோ அல்லது உயிரிழப்புக்களோ ஏற்படவில்லை என கஸகஸ்தானின் விண்வெளி நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்படி ரொக்கெட் வெடிப்பின் போது உயர்ரக நச்சு எரிபொருள் எரிந்துள்ளமையினால், பைக்கனூர் நகரில் அமைந்துள்ள குறித்த ஏவுதளத்தைச் சுற்றியுள்ள மக்களின் சுகாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை கஸகஸ்தான் அவசரகால அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த ரொக்கெட் விபத்தினால் ரஷ்யாவுக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.