தொடர்மாடி வீட்டுத் தொகுதியொன்றின் 24 ஆவது மாடியிலிருந்து விளையாட்டாக ஜன்னல் வழியாக ஏறி வெளியில் செல்ல முயற்சித்த 5 வயதான சிறுமியின் தலை ஜன்னலில் இரும்புக் கம்பிகளிடையே சிக்குண்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் டலாய் எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி தனது வீட்டிலின் அறையிலிருந்து ஜன்னல் வழியாக வெளியே ஏறிச்செல்ல முயற்சித்துள்ளாள். இதன்போது அச்சிறு மியின் உடல் ஜன்னல் இடைவெளியினூடாக வெளியே சென்றபோதிலும் தலை ஜன்னலில் சிக்கியது.
தரையிலிருந்து சுமார் 70 மீற்றர் தூரத்தில் தலை மாட்டிக்கொண்டது. சிறுமியின் அழுகைக் குரல் அயல் வீட்டில் படித்துகொண்டிருந்த யுவதிக்கு கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த யுவதி 119 மற்றும் 110 என்ற அவசர சேவை தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு வந்த மீட்புப் பணியாளர்கள் ஜன்னல் கம்பிகளிடையே சிக்கியிருந்த சிறுமியை 10 நிமிடங்கள் போராடி மீட்டுள்ளனர்.
இதேவேளை தனது தாய் தன்னை தனியாக வீட்டில் வைத்து அடைத்து விட்டுச் சென்றதாக அந்த 5 வயது சிறுமி கூறியுள்ளாள்.