Home » குட்டிக்கதைகள் » வேகமா போனா லேட்டாகுமா?

வேகமா போனா லேட்டாகுமா?

குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாய் வந்துகொண்டிருந்தான் ஒருவன். குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்.

‘‘தம்பி, இந்த ரோட்ல போனா ஊர் வருமா?’’

‘‘வருமே’’ என்றான் சிறுவன்.

‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’

‘‘மெதுவா போனா பத்து நிமிஷத்துல போயிறலாம். வேகமாய்ப் போனா அரைமணி நேரம் ஆகும்’’

சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரைவண்டிக்காரனுக்குக் கோபம்.

‘‘மெதுவா போனா சீக்கிரம் போயிரலாம்? வேகமா போனா லேட்டாகுமா? கிண்டலா?’’ என்று சிறுவனிடம் கோபித்துக் கொண்டு வண்டியை வேகமாய் ஓட்டினான்.

கொஞ்ச தூரம் போவதற்குள் சாலை முழுவதும் கற்கள். வேகமாய்ப் போன வண்டி தடுமாறி கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போவதற்குள் அரைமணி நேரத்துக்கு மேலாகிவிட்டது.

சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

Leave a Reply