நம் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள் அனைத்தும் நம் மனதில் பதிந்து விடுவதில்லை. ஒரு சில மனிதர்கள் மட்டுமே பதிவார்கள். அப்படி என்னை அயல்நாட்டில் அசத்தி, என் மனதில் பதிந்தவர்களைத் தான் எழுதியிருக்கிறேன்.
1) சரவணபவனில் மெனு கார்டை பார்க்காமலேயே thaali rice, thosa என்று வேண்டியதைப் பெற்று கையாலேயே சாப்பிடும் வெள்ளையர்கள்.
2) கடைத்தெரு சுற்றி வருகையில் திடீரென வழிமறித்து , நீ இந்தியப் பெண்ணா ??உனக்கு சேலைக் கட்டத் தெரியுமா?? எப்படிக் கட்டுவதென்று எனக்குச் சொல்லித் தர முடியுமா ?? என்றுக் கேட்ட வெள்ளைக்காரப் பெண்கள் கூட்டம்.
3) பிரான்சிலேயே பிறந்து வளர்ந்த குழந்தையாயிற்றே என்று “salut , tu vas bien??” என்றால் “அக்கா நான் நல்லாத் தமிழ் பேசுவேன்” என்றென்னை செருப்பால் அடித்த என் நண்பரின் குழந்தை.
4) உள்ளூரில் இருக்கும் பெண்களில் பலரும் அயல் நாட்டு மோகத்தில் அலைகையில், அயல் நாட்டின் அன்றாட வாழ்வில் ஊறிப்போன பின்னர் கூட உடையில் கவனமாய் இருந்து , இன்னும் கல்லு வச்ச மூக்குத்தியை மாற்றி வளையமாக்காத எம் குலப் பெண்கள் (ஒரு சிலரே).
5) ஐரோப்பிய வெள்ளை அழகிகள் ஆயிரம் இருக்க, அயல் நாட்டிலேயே வளர்ந்தும் தமிழ் பெண்களையே தேடிப்பிடித்து காதலிக்கும் எம் குல ஆண்கள் (ஒரு சிலரே).
6) உனக்குப் பரத நாட்டியம் ஆடத் தெரியுமா?? என்று என்னைப் பார்த்துக் கேட்ட என் அலுவலக சக ஊழியர். இதில் என்ன அசத்திபுட்டாங்கன்னு கேட்கறிங்களா??. அவர் ஒரு ஆப்பிரிக்கர். தென் ஆப்பிரிக்காவின் மிகவும் பின் தங்கிய குக்கிராமத்திலிருந்து வந்தவர்.
சென்னையை பற்றியும் தமிழ் நாட்டைப் பற்றியும் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றியும் கேள்வி கேட்டே என்னைக் கொல்லுபவர்.
7) 18 வயதானால் போதும் பெற்றோரைப் பிரிந்துப் பிள்ளைகள் தனியே வாழலாம் எனும் கலாச்சாரத்திலும் பிள்ளைகளை கைக்குள்ளேயே வைத்து வளர்த்து எங்கே செல்கிறாய்?? யாருடன் செல்கிறாய்?? என்று கேள்வி கேட்கும் பெற்றோர்கள்.(பிள்ளைகளை இந்திய முறைப் படி வளர்க்கும் பெற்றோர்களும் ஒரு சிலரே )
ஐரோப்பாவின் தட்பவெப்ப சூழலிலும் வாழ்கை முறையிலும் நன்றாக பழகிவிட்டாலும் “சொர்க்கமே கண்ணுல காமிச்சாலும் என் சொந்த ஊரப் போல வராது “என்று ஆண்டுக்கொரு முறை ஊரை எட்டிப் பார்த்திட ஏங்கும் உள்ளங்கள்.
9) ஆங்கில வார்த்தைக் கலக்காமல் தமிழில் ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் பேசினால் பரிசு எனும் போட்டி நடத்தும் நிலைமை உள்ளூரில் இருக்க, தமிழை பள்ளியில் கற்க வாய்பில்லாத போதும், தனியே தமிழ் பயின்று இசை முதல் கவிதை போட்டி வரை கலக்கும் மாணவர்கள்.
10) இவைகளையெல்லாம் தாண்டி பாரீஸ் நகரத்தில், நகரின் முக்கியப் பகுதியில் இயங்கும் தமிழ் கடைகளில் பெரிய தமிழ் எழுத்துக்களில் பெயர் பலகை வைத்திருக்கும் வணிகர்கள். வரிச்சலுகை வேண்டுமானாலும் தருகிறோம் தமிழில் பெயர் பலகை வையுங்கள் என்று எவரையும் கெஞ்ச வேண்டிய நிலைமை இல்லை.
இதில் இருந்து என்னத் தெரிகிறது என்றால், நாம் யார்? என்று நம்மில் பலருக்குத் தெரியாவிட்டாலும் நம்மவர் இல்லாத பலருக்குத் தெரிந்திருக்கிறது.
அன்புடன்,
ஆதிரா.