செல்போன்களில் எப்.எம் ரேடியோ வந்த பிறகு சதாசர்வ நேரமும், ஹெட்போனை காதில் வைத்துக் கொண்டு பாடல் கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். பேருந்துக்காக காத்திருக்கும் நேரம், ரெயிலில் பயணம் செய்யும் நேரம் என அதிக நேரம் காதில் ஹெட்போனை மாட்டி நிகழ்ச்சிகளைக் கேட்கின்றனர். இப்படி தொடர்ந்து பாடல் கேட்டுக்கொண்டே இருப்பதால் காது கேட்கும் திறன் குறைவதோடு, மன ரீதியான பிரச்சினைகள், இதயம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
சத்தம், கேட்கும் நேரம் போன்ற இரண்டும் அதிகரிக்கும்போது காதில் உள்ள உணர்வு நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் கேட்கும் திறன் குறையும். பாதிக்கப்பட்ட நரம்புகளை மீண்டும் சரி செய்ய முடியாது என்பதால் கேட்கும் திறனை முற்றிலுமாக இழக்கும் வாய்ப்பும் உள்ளது.
காதில் வலி, தூக்கமின்மை, தலைவலி போன்ற உடல் உபாதைகள் இதனால் ஏற்படும். தேவையற்ற கோபம், எரிச்சல் போன்ற மனரீதியான பாதிப்புகள் ஏற்படும். காலப்போக்கில் இதய பிரச்சினைகளும் ஏற்படும். ஹெட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால், கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு மருத்துவர்களை அணுகி வருபவர்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறார்கள். எனவே `அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதை செல்போன் உபயோகிப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.