எந்த `மை’யை வைத்து மயக்குகிறார்களோ தெரியவில்லை, டீன்-ஏஜ் என்னும் விடலைப் பருவத்தில் ஆணோ-பெண்ணோ சீக்கிரம் காதல் வயப்படுகிறார்கள். கண்ணடிபட்டு காத லாகும் இந்த டீன்-ஏஜ் காதலில் பெரும்பாலானவை கல்லறையில் முடிவது தான் சோகம்..
`காதலுக்கு இனம், மதம், மொழி பேதமில்லை’ என்று வியாக்கியானம் பேசும் ஜோடிகள், எதிர்ப்புகள் வலுக்கும் போது அதனை சந்திக்க திராணியில்லாமல் மனம் ஒடிந்து போவ தேனோ…? படிக்கும் வயதில் காதல் தேவைதானா?- என்று எத்தனையோ கேள்விகள், பத்திரிகைகளில் காதல் ஜோடி தற்கொலையை படிக்கும் போது நினைவலைகளில் ஓடிக் கொண்டிருக்கும்.
`காதல்’ எப்போது பிரச்சினையாக மாறி டீன்-ஏஜ் இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டு கிறது என்பதை இனி பார்ப்போம்.
`தேசிய குற்ற ஆவண காப்பகம்’ என்கிற அமைப்பு கவலை தரும் செய்தியை வெளி யிட்டுள்ளது. “ஆண்டுதோறும் டீன்-ஏஜ் காதல் ஜோடிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. 2006-07-ம் ஆண்டில் மட்டும் 5857 பேர் தற்கொலையை கச்சிதமாக நிறை வேற்றி உள்ளனர்” என்கிற வேதனை தரும் செய்தியை அந்த அமைப்பு புள்ளி விவரத் துடன் காட்டுகிறது.
காதல் தோல்வியுடன், பரீட்சை தோல்வியும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி தற்கொலைக்கு உசுப்பேத்துகிறது என்கிற விவரமும் தெரிய வருகிறது.
பக்குவப்படாத வயதில் தோன்றும் காதல் எண்ணங்கள் எது நல்லது? எது கெட்டது? என்பதை சிந்திக்க விடுவதில்லை. நாளடைவில் பெற்றோருக்கு விஷயம் தெரிந்து வில் லங்கம் ஆகும் போது பெற்றோரையே உதறித்தள்ளிவிடும் எண்ணம் வந்துவிடுகிறது. பிரச் சினை இன்னும் வலுத்தால் தற்கொலை முடிவை நோக்கி இறுதிப் பயணம் மேற் கொள்கிறார்கள்.
“மனநெருக்கடி அதிகரிப்பு, உறக்கம் இல்லாமல் தவித்தல், தனிமையில் உட்கார்ந்து சம் பந்தம் இல்லாமல் யோசித்தல், மன அழுத்தத்துக்கு உள்ளாகுதல் உள்ளிட்ட காரணங்கள் டீன்-ஏஜ் காதலர்களை தற்கொலைக்கு அழைத்துச் செல்கிறது” என்கிறது ஒரு ஆய்வுத் தகவல்.
வாழ வேண்டிய பொற்காலம் காத்திருக்க, அதனை மறந்து மரணம் ஒன்றே தீர்வு என்கிற ரீதியில் முதுகெலும்பு இல்லாமல் சிந்திக்க காரணம் யார்? என்று ஆராய்ந்தால் `பெற் றோர்கள்’தான் முதலிடம் பிடிக்கின்றனர்.
இளம் பருவத்தில் குழந்தைகளின் சிந்தனை, செயல்பாடுகளில் வரும் மாற்றங்களை அவர் கள் கண்டும் காணாததுபோல் விட்டுவிட்டால் பிரச்சினைக்கு தூபம் போடுவது போல் ஆகிவிடுகிறது. ஒருவேளை மகன்-மகளிடம் விசாரித்து அவர்கள் காதலிப்பதை ஒப்புக் கொண்டால் தாம்தூம் என்று விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து அவர்களை அடித்து உதைக்கிறார்கள். ஆனாலும் அடிபட்டவர்கள் தங்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் காதலிப்பது தெரிந் தால் பெற்றோரின் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும்?
1. மகனோ-மகளோ காதலிப்பது தெரிந்தால் வீட்டில் அவர்களை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு மிகப்பெரிய பிரளயத்தை ஏற் படுத்திவிட வேண்டாம்.
2. டீன்-ஏஜ் மாணவப் பரு வத்தில் வரும் காதலால் படிப்பு- எதிர்கால லட்சியத்தில் விழும் கேள்விக் குறிகளை பெற்றோர் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். பெரியோர் புத்திமதி சொல்ல வேண்டும் என்கிற காரணத்துக்காக அக்கம்பக்கத்து வீடுகள், தூரத் தில் வசிக்கும் உறவினர் வீடுகளுக்கு தகவல் அனுப்பி, மகனின் – மகளின் காதல் ரக சியத்தை பரப்பிவிட வேண்டாம். இது அவர்களை எதிர்மறையாக சிந்தனை செய்ய வைத்து விடும்.
3. புத்திமதிகளுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை எனில் சிறந்த மனோதத்துவ நிபு ணரிடம் அவர்களை அழைத்துச் செல்லலாம்.
4. அவர்களின் நெருங்கிய நண்பர், பிடித்த உறவினர் மூலம் நல்ல விஷயங்களை எடுத் துக் கூறி புரிய வைக்கலாம்.
5. காதல் வாழ்க்கையால் எதிர்காலத்தை இழந்து தவிப்பவர்களைப் பற்றி எடுத்துக்கூறி நடைமுறை வாழ்க்கை என்ன என்பதை புரிய வைக்கலாம்.
6. பெற்றோரே நல்ல விஷயங்களைக் கூறி சிந்தனையைக் கிளறிவிட்டு பிள்ளைகளை இறுதி முடிவு எடுக்க வைக்கலாம்.
7. சில வீடுகளில் மூத்த சகோதர-சகோதரிகள் மணமாகாத நிலையில் இருப்பார்கள். எனவே குடும்பத்தில் அவர்களுக்கு உண்டான பொறுப்பு, கடமையைப் பற்றி எடுத்துக் கூறலாம்.
8. எக்காரணம் கொண்டும் காதல் வயப்பட்ட தங்கள் குழந்தையை தனிமைப்படுத்தவோ, சந்தேக கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது. வழக்கமான அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வீட்டில் தான் தனி மைப்படுத்தவில்லை என்கிற நம்பிக்கை அவர்களிடம் தெளிவை ஏற்படுத்திவிடும்.
9. மகளோ-மகனோ காதலிப்பது தெரிந்துவிட்டால் கண்கொத்திப் பாம்பாக பின்தொடர்ந்து நிழல்போல் கண்காணிக்க கூடாது.
10. அவர்கள் விரும்பும் இடங்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தலாம்.
*****************
இளைஞர்களுக்கு ஏற்ற `5′
1. இளம் பருவத்தில் வரும் காதல் `கடவுள் கொடுத்த பரிசு’ என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். டீன்-ஏஜ் வயதில் வரும் வழக்கமான உணர்வுதான் காதல். வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க ஏற்ற வயதோ, பக்குவமோ உங்களுக்கு வரவில்லை என்பதை உணர்ந்து கொண்டாலே போதும்.
2. திருமணம் வாழ்க்கை முழுவதும் தொடரும் பந்தம். எனவே காதல் உள்பட எந்த விஷ யத்திலும் அவசரம் காட்டக் கூடாது. இதைவிட சிறந்த வாழ்க்கை எதிர்காலத்தில் அமை யும் என்று உறுதியாக எண்ணும் மனநிலையை வளர்த்துக் கொள்வது முக்கியம்.
3. இப்போதைக்கு உங்களுக்கு உள்ள கடமையை புரிந்து கொள்ளுங்கள். அதை மறந்து காதலில் தீவிரம் காட்டினால் உங்களது திறமை குன்றிவிட வாய்ப்பு உள்ளது.
4. எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, அது பலகீனமானது என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.
5. உங்கள் காதலால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் சில பிரச்சினைக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. எனவே உங்களால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதில்உறுதியாக இருங்கள்.
-தினத்தந்தி-