எழுது எழுது என
எனை
எழுதத்தூண்டும்
என்னவளுக்கு…..!
எதை எழுதுவது….?
சோகங்களையே சுவாசங்களாக்கி
இதயம் முட்ட
இன்னல்லகளையும் ஏமாற்றங்களையும்
சுமந்து
நடைபிணமாய் அலையும்
என்னைப்பற்றி எழுதவா….?
அல்லது….
நான் போகுமிடமெல்லாம்
பூக்களாகத்தோன்றிப்
புன்னகைத்தவர்கள் – இன்று
முடகளாகமாறி
என்பாதங்களில்
குருதி தேடுவதைப்பற்றி….
அல்லது…
பாலர் பருவத்தில் நெருப்புப் பெட்டியில்
நூல்கட்டி
தூரத்தூர நின்று
தொலைபேசியில் தொடர்பெடுத்து
தங்கச்சி கேக்குத…எனும்
என் கேள்விக்கு
“சத்தமாக் கதையண்ணா”
அப்பதான் கேக்கும் – என்ற
என்தங்கை
சத்தமின்றி நெடுங்கேணியில்
நீறாகி விட்டதைப்பற்றி….
அல்லது….
சிங்களச்சிப்பாய்களின்
சித்திரவதைகளால்
தினம் தினம்
உணர்விழந்து வரும் – என்
அங்கங்களைப்பற்றி…..
எதை எழுதுவது….?
சுரியன் போல வருவீங்கள்
என்றவளே…!
நான் சுடுகாடு போகமுன்னம்
எழுதிப்பழகு
எனக்காகவோர் இரங்கல்க் கவிதை – என்று
சொல்லமாட்டேன்
சோகங்களையும் துயரங்களையும்
துடைத்தெறிய…..
வாழ்க்கையின் வெற்றிக்கான
இறுதிக்கட்டப் போரில்
ஈடுபட்டிருக்கிறேன்
வெற்றிக்கான எல்லை
வெகுதூரமில்லை
அப்பொழுது உன்
கனவுகள் நனவாகும்
என் பேனாவின் பிரகாசம்
வானைத்தொடும்
அதுவரை காத்திரு
-நேசமுடன்-
ரமேஷ் வவுனியன்-