மகனுக்குத் தந்தைமேல் கோபம். அவருக்குக் காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது. எதைச் சொன்னாலும் ‘என்னது?, என்னது?’ என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். விளக்கிச் சொன்னாலும் சட்டென்று அவருக்குப் புரிவதில்லை. எரிச்சலின் உச்சத்திலிருந்தான் மகன்.
‘‘என்னப்பா சொன்ன?’’ என்று மீண்டும் தந்தை கேட்க, மகன் வெடித்து விட்டான்.
‘‘என்ன இது? எத்தனை தடவைதான் திரும்பத் திரும்பச் சொல்றது. ஒரு தடவை சொன்னா புரியாதா? புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க?’’ கத்தினான்.
தந்தை அவனை அமைதியாகப் பார்த்தார். பிறகு மெதுவாய்ச் சிரித்தார்.
‘‘இவ்வளவு கோபமா சொல்றேன். எதுக்குச் சிரிக்கிறீங்க?’’
தந்தை பதில் பேசவில்லை. தன் அறைக்குச் சென்றார். அங்கிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு வந்தார். அவரது பழைய டைரி. அதில் ஒரு பக்கத்தை மகனை வாசிக்கச் சொன்னார்.
‘‘அருண் மடியில் அமர்ந்து மரத்திலிருந்த காக்காவைக் காட்டி ‘அது என்ன?’ என்று கேட்டான். ‘காக்கா’ என்றேன். மீண்டும் மீண்டும் ‘அது என்ன?’ என்று கேட்டான். நானும் சொன்னேன். ஆனால், அவன் விடவில்லை. அந்த காகம் பறந்து செல்லும் வரை பல தடவை கேட்டுக் கொண்டே இருந்தான். நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். மகன் குரலைக் கேட்க கேட்க எனக்கு ஆனந்தமாயிருந்தது.’’
இதைப் படித்ததும் மகன் உணர்ச்சிபூர்வமாகத் தந்தையைப் பார்த்தான்.
‘‘அப்போ உனக்கு மூணு வயசு’’ என்றார் தந்தை.
நீதி : பெற்றோர் இல்லையென்றால் நம் வாழ்க்கை இல்லை.