தமிழனுக்கென்று….எமக்கென்று ஒருதேசம் இல்லாததால் எமது தேச ஆக்கிரமிப்புப் பேய்களிடம் தங்கள் குழந்தைகளின் உயிர்களைப் பலிகொடுக்க விரும்பாமல் உயிரெண்டாலும் மிஞ்சட்டும் என எண்ணி உறவுகள் இல்லாத தேசங்களுக்கு தங்கள் குழந்தைககளை அனுப்பிவிடும் பெற்றோர்கள் இந்தப் பிஞ்சுகள் புலம் பெயர் மண்ணில் அனுபவிக்கும் கொடுமைகளை அறிவார்களா…? இதற்கு என்ன தீர்வு…? எமக்கென ஓர் தேசம் இருந்தால் இது நடக்குமா….?
கீழ் வரும் தேடல் ஐரோப்பிய நாடொன்றில் உயிரறுந்து போகும் ஓரு ஈழக்குழந்தையின் ஏக்கம்.
அன்புள்ள அம்மாவுக்கு…!
அழுது…அழுது…
அடம்பிடித்து
வேப்ப மரத்தில்
ஏறியொழித்து…
இன்னும்….இன்னும்….
எத்தனை….எத்தனை…
விட்டாயா…?
ஏஐன்சிக்குக் காசுகட்டி
எல்லாம் முடிந்தபின் – எனை
கொற கொறவென
இழுத்தபோது
படலையைப் பற்றியபடியே
நானிட்ட கூச்சல்
ஊரையே கூட்டியதே…!
மறந்துவிட்டாயா…?
ஏனம்மா என்னை
ஐரோப்பியத்தெருக்களில்
அனாதையாய்
அலையவிட்டாய்…?
“உயிரெண்டாலும்
மிஞ்சுமெண்டுதான் மோனை
ஐயோ…
வேண்டாம் நிறுத்து…!
உணர்விழந்த உடலுக்கு
உயிரெதற்கம்மா…?
நான்
சின்னப்பொடியனெண்டாப்போலை
காம்பில வாறவன் போறவன்
வெள்ளை கறுவல்
காப்பிலி சப்பட்டை
எல்லாரும் என்னப்போட்டு…
என்னண்டு சொல்லுறது
அழாதையம்மா…
அம்மா…அப்பா…
அக்கா…தம்பி…
எல்லாரும் இருந்தும்
அரவணைக்க ஆருமில்லாம
நாடு நாடாய்…
அகதியாய்…அனாதையாய்…
இந்தச் சின்ன வயசில
ஏனம்மா…?
அழாதையம்மா…
இஞ்ச
எங்கட பொடியளே
வாய்க்கை சாராயத்தை ஊத்தி
சிகரெட்டையும்
அமத்துறாங்கள்
எப்பிடியம்மா நான்…?
இதுக்காகவா
என்னைப் பெற்றாய்…?
இங்கு என்னைப்போல்
இன்னும் எத்தனை
சிறுவர்கள்
துளிர் விடும் பருவத்தில்
உறவறுந்து… உயிரறுந்து …
ஏனம்மா…?
ரமேஷ் வவுனியன்.