பதறவைக்கிற பாலா ஸ்பெஷல் ‘ருத்ர தாண்டவம்’!
‘அஹம் பிரம்மாஸ்மி’ – அத்வைதத்தின் அடிப்படைச் சூத்திரத்தின் அதிரவைக்கும் உச்சாடனம்தான் படம். காசியில் கைவிட்ட தன் மகனைத் தேடி 14 வருடங்கள் கழித்து வருகிறார் ஒரு தந்தை. பிண வாடையையே மூச்சுக் காற்றாகக்கொண்ட, பிணங்களுக்கு மோட்ச வரம் கொடுக்கிற ‘அகோரி’யாக அலைகிற மகன் ஆர்யாவை, சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். ஆனால், உறவுகள் மேல் பற்றற்று கஞ்சா போகத்திலும் மோனத் தியானத்திலும் மூழ்கிக்கிடக்கிறார் முரட்டு ஆர்யா. அதே ஊரில் இருக்கிறது, உடல் சிதைந்த மனிதர்களையும் ஊனப்படுத்தப்பட்டவர்களையும் பிச்சை எடுக்கவைக்கிற தாண்டவனின் ‘ஊனமுற்றவர்கள் தொழிற்சாலை.’ அதில் சிக்கிக்கொள்கிறார் பார்வையற்ற பூஜா. இரக்கமற்ற அரக்கர்களிடம் சிக்கிச் சிதையும் பூஜாவுக்கு ஆர்யா அளிக்கும் மோட்சம் என்ன என்பதே கடவுள் கதை!
ஜெயமோகனின் ‘ஏழாவது உலகம்’ நாவலைத் தழுவி, விரிகிறது திரைக்கதை. கவன எல்லைக்குள் வராத பிச்சைக்காரர்களின் துயரங்கள், கொண்டாட்டங்கள், உறவுகள் ஆகியவற்றை முதன்முதலாகத் திரையில் கொண்டுவந்ததற்காக இயக்குநர் பாலாவுக்குப் பாராட்டு! உடல் கலைந்த, உயிர் மிஞ்சிய ஜீவன்களை உருப்படிகளாக்கி பரிதாபப் பிச்சை எந்திரங்களாக மாற்றும் கொடூரத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அதே போல, இது வரை நாம் அதிகம் அறிந்திராத அதிர்ச்சியாக, ‘நான் கடவுளாகி’ வரமும் சாபமும் வழங்கும் அகோரி சாமியார்களைப் பற்றி பாலீஷாகச் சொல்கிறார். இரண்டு வகை மனிதர்களையும் ஒரே புள்ளியில் இணைத்திருப்பது ரசிக்கத்தக்க புத்திசாலித்தனம்!
கங்கைக் கரையெங்கும் பிணங்கள் எரிய, வேதகோஷங்கள் முழங்க, சந்நியாசிகள் நர்த்தனமாட… தலைகீழ் தவம் புரிந்தபடி ஆக்ரோஷமாக ஆர்யா அறிமுகம் ஆகும் காட்சி, ஒரு தமிழ் சினிமா நாயகனுக்கு ‘ரௌத்ர ஆரம்பம்’. அலை பாயும் கண்களும், அலட்சிய மேனரிஸமுமாகப் பார்த்துப் பழகிய ஆர்யாவா இது? சிவந்த கண்களில் வெறித்த பார்வை, விறைப்பான உடம்பு, முறைப்பான நடை, கனல் வெப்பத்தையும் கனமான அர்த்தத்தையும் சுமந்து வரும் சிக்கன வார்த்தைகள், ரணகளச் சண்டையின்போதும் சடாரென ஆசனம் போட்டு அமரும் லாகவம் என நிஜ காலபைரவனாக நம் மனதில் ஆசனமிடுகிறார் ஆர்யா.
பார்வையற்ற பிச்சைக்காரப் பாடகியாக பூஜா, உருக்கத்தால் உலுக்கி எடுத்திருக்கிறார். குழந்தைக்குப் புத்திமதி சொல்வது போல ஆர்யாவுக்கு ‘அம்மாவை மதிக்கணும்… சரியா சாமீ?’ என்று டீச்சர் டைப்பில் அறிவுரை சொல்லி, ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ என்று பாடுகிறபோது… சபாஷ் பூஜா. தன் கேர் டேக்கரின் முதுகில் தொற்றிக்கொண்டு வருவது, புழுதிக் காட்டில் புரள்வது என இவர்தான் கதையின் நாயகி!
‘உருப்படி’களின் ஏஜென்ட்டாக வரும் கிருஷ்ணமூர்த்தியின் பாத்திரப் படைப்பு மனுஷத்தனம் மிக்க அழகு. ‘வசூலைக் கெடுத்துராதீங்கடா!’ என்று தன் கீழுள்ள பிச்சைக்காரர்களிடம் கெஞ்சும்போதும், போதையில் அவர்களை இழுத்துவைத்துக் கொஞ்சும்போதும் ரசிக்கவைக்கிறார். வில்லன் தாண்டவனாக வரும் ராஜேந்திரனின் விஸ்வரூபம் அசத்தல். மொட்டைத் தலை, நரம்பு உடம்பு, கடவுள் பக்தி, துளியும் இரக்கமில்லாத கொடூரம் என வித்தியாச வில்லன். கால் திருகிப் பிறந்திருக்கும் ஓர் ஊனமுற்ற பையனைப் பார்த்து, ‘நல்ல உருப்படி… நமக்கு வேலை வைக்கல’ என்று சந்தோஷம் காட்டும்போதும், பூஜாவை அடித்துத் துவைக்கும்போதும் மிரட்டி எடுக்கிறார்.
‘தாயே மகாலட்சுமி, ஆதிலட்சுமி, வரலட்சுமி…’ என்றெல்லாம் இறைஞ்சியும் காசு போடாத பெண்ணை ‘ஏய்! ஜோதிலட்சுமி’ என்கிற குசும்பிலும், ‘அம்பானி யாரு?’ என்றதும், ‘செல்போன் விக்கிறவய்ங்க. அதெல்லாம் உனக்குத் தெரியாது’ என்ற நக்கலிலும் தெறித்துச் சிரிக்கவைக்கிறான் வடுகப்பட்டி செந்தில்.
கடவுளைக் கண்டபடி வசை பாடும் கவிஞர் விக்கிரமாதித்யன், பிச்சைக்காரர்களிடம் பரிவு காட்டும் திருநங்கை கீர்த்தனா, மாங்காட்டுச் சாமியாக வரும் ‘கோவை’ கிருஷ்ணமூர்த்தி, கூத்தாடும் ‘நயன்தாரா’ என சின்னச் சின்ன கேரக்டர்கள் சுவாரஸ்யத்துக்குக் கை கொடுக்கிறார்கள். ‘இவனையும் சீக்கிரம் தொழிலதிபர் ஆக்கிட்டா, ஏதாவது ஒரு நடிகைக்குக் கல்யாணம் பண்ணிவெச்சிடலாம்’ என்று பிச்சைக்காரர்கள் கதைத்துக்கொள்ளுமிடங்களில் சிரிக்கவைக்கும் ஜெயமோகனின் வசனம், கடவுளைப் பற்றிய சுரீர் வசனங்களில் சீரியஸாகக் கவனிக்கவைக்கிறது.
சிதிலமுற்ற மனிதர்கள், அகோரி சாமியார்கள் என்று நாம் இதுவரை அறிந்திடாத இரு பெரும் உலகின் தரிசனங் களை அசாத்திய இசையால் சாத்தியப்படுத்துகிறார் இளையராஜா. ‘பிச்சைப் பாத்திரம்…’ பாடலில் உருக் கத்தின் உச்சமாகத் தாலாட்டுகிறது இசை.
காசியின் மொத்த குணத்தையும் சில நிமிடங்களில் சொல்லிவிடுகிற கட் ஷாட்கள், பொட்டல் காட்டின் நடுவே அண்டர்கிரவுண்ட் பிச்சைக்காரர்களின் கிடங்கு, மலைக் கோயில் சண்டைக் காட்சிகள் அனைத்திலும் ஆர்தர் ஏ.வில்சனின் கேமரா அனலும் அழகுமாக வெளிப்படுகிறது.
ஒரிஜினல் அடியும் உக்கிர வேகமுமாகச் சண்டைக் காட்சிகளில் ஆர்யாவின் ரௌத்ரத்துக்கு ஏற்ப மிரட்டல் மேஜிக் செய்திருக்கிறார் ‘சூப்பர்’ சுப்பராயன்!
இத்தனை இருந்தாலும், மீண்டும் மீண்டும் பாலாவின் முந்தைய படங்களைப் பார்ப்பது போன்ற களைப்பு தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை!
விறைத்த உடம்புடன் நடக்கும் அசாதாரண மனிதர்களைத் தாண்டி, பாலாவிடம் வேறு கதை நாயகர்கள் உருவாக மாட்டார்களோ? போலீஸையும் கோர்ட்டையும் மையமாக்கிய காமெடிகளும் பாலாவின் வழக்கமே! ஆர்யாவின் தாய் அழும் காட்சிகள் சீரியல் எபிசோட். என்னதான் கிராமமாக இருந்தாலும் ஒரு பொட்டல் காட்டில், கட்டி முடிக்கப்படாத கோயிலின் அடியிலேயே பிச்சைக்காரர்கள் கோடவுன் இயங்குகிறது என்பதும், வெளிநாட்டுத் தூதர்கள் கணக்காக பிசினஸ் பேச ஆட்கள் வந்து போகிறார்கள் என்பதும் நம்ப முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் கதை நகராமல் கோயில் படிக்கட்டுகளிலும் பிச்சைக்காரர்கள் கோடவுனிலும் தேங்கி நின்றுவிடுகிறது.
இறுதிக் காட்சியில் பாலாவின் வழக்கமான படங்களுக்கு நேர் எதிராக பூஜா பேசும் அத்தனை நீளமான டயலாக் அலுப்பு. பிச்சைக்காரர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் அதிர்ச்சி கொடுத்தாலும், போகப் போக காமெடியாகி அவர்கள் வாழ்க்கையின் அவலச் சுவையே நகைச்சுவையாகிப் போவதால், அழுத்தம் குறைகிறது. தனித்தனிக் காட்சிகளில் தென்படும் பிரமிப்பு, ஒட்டுமொத்தப் படத்தை இணைத்து இழுத்துச் செல்லும் மைய இழை மிஸ் ஆவதால்… கடவுளின் கழுத்து மாலையில் ஏதோவொரு நெருடல்!
இருந்தாலும், இந்தக் களம் புதிது! அந்தப் புது அனுபவத் துக்கும் புயல் உழைப்புக்கும் தரிசிக்கலாம், பாலாவின் கடவுளை!
– விகடன் விமர்சனக்குழு.-