தத்தித்தத்தி தண்டவாளத்தில்நடந்து
விக்கிவிக்கி விளாங்காய் கடிக்க…
காவல் குடிலில்
கவிஞனாய்…
அறிவிப்பாளனாய்…
பாடகனாய்…
அவதாரமெடுத்து
உரக்கக்கத்தி பண்டி வெருட்ட…
அம்மாவின் கைகள் பட்ட
கத்தரிக்காய்ப் புட்டையும்
கருவாட்டுக் குழம்பையும்
பலகைக் கட்டையிலிருந்து
பசியாற உண்ண…
கடும் இருட்டில்
காட்டுச்சுடலையும்-முனியப்பர் கோயிலும்
கடக்குமட்டும்
சைக்கிள் பெடலை இறுக்கி மிதித்து
கத்திக்கத்தி பாட்டுப்படித்து
பயமற்றவன் என்பதை பறைசாற்ற…
மண்ணுக்காய் வித்தான
மாவீரர் இல்லங்களில்
மலரடுக்கி அஞ்சலி செய்ய…
தூரமதிகமில்லை…
நாடின்றி நாதிலற்று
அன்னிய வீதிகளில் அலையும்
அவல வாழ்வு இனியும் வேண்டாம் …
அதோ பாருங்கள்…!
தமிழீழமெனும் தனிநாடு
பிரசவமாகிக் கொண்டிருக்கிறது…!!
மீண்டும்
எங்கள் மண்ணின் வீதிகளில்….
வயல் வரப்புகளில்….
ஆற்று மணலில்….
ஆடிப்பாடி மகிழ….
தூரமதிகமில்லை…
(ஆனையிறவு மீண்ட மகிழ்ச்சியில் இளைஞனொருவனின் நா உதிர்ந்தவற்றை அலங்காரமின்றி அப்படியே பதிவுசெய்திருக்கிறேன்)
ரமேஷ் வவுனியன்.