ஜெர்மனியைச் சேர்ந்த அந்த ஓவியன் கடுமையாக உழைக்கக்கூடியவன். பகல் எல்லாம் உழைத்துவிட்டு இரவில்தான் வீடு திரும்புவான். இரவு, வீட்டுக்கு வந்ததும் தூங்கிவிட மாட்டான். ஐரோப்பாவின் வரைபடத்தை தனக்கு முன்பாக வைத்துக்கொண்டு அதையே நீண்டநேரம் பார்த்துக் கொண் டிருப்பான்.
ஒருநாள் இதை கவனித்துவிட்டாள், அந்த வீட்டு உரிமையாளரின் பெண். மறுநாள் காலையில், “ஏன் இரவில் வெகுநேரம் வரை தூங்காமல் விழித் திருக்கிறாய்? ஐரோப்பா கண்டத்தையே உனக்கு கீழ் கொண்டு வருவதுபோல் பார்த்துக் கொண்டிருக்கிறாயா?” என்று கிண்டல் செய்தாள்.
அந்த ஆண் மகனுக்குள் லேசாக கோபம் எட்டிப் பார்த்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“ஆமாம்! ஐரோப்பா கண்டத்தையே எனக்கு கீழ் கொண்டுவரப் போகிறேன்” என்று உறுதியாக சொன்னான். அப்படிச்சொன்ன அந்த ஓவியன், ஐரோப்பிய கண்டத்தையே நடுநடுங்க வைத்தான். பல ஐரோப்பிய நாடுகளை தனக்கு கீழ் கொண்டு வந்தான்.
அவன் தான் ஹிட்லர்.
ஒருவனிடம் கோபம் மட்டும் இருந்தால் நிதானம் இருக்காது, விவேகம் வராது. குறிக்கோளுடன் செயல்பட்டால்தான் கோபத்தை வெல்ல முடியும். நினைத்ததை சாதிக்க முடியும்.
ஹிட்லரிடம் கோபமும் இருந்தது, விவேகமும் இருந்தது, தந்திரமும் இருந்தது, கூடவே குறிக்கோளும் இருந்தது. அதனால்தான் ஒரு நாட்டுக்கே சர்வாதிகாரியாக முடிந்தது. பல நாடுகளையும் தனக்கு கீழ் கொண்டுவர முடிந்தது.
அதே ஹிட்லரிடம் கோப உணர்ச்சிகள் அதிக மானதால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப் பட்டார்கள். உலக நாடுகள் பலவற்றுக்கும் எதிரியானார். கடைசியில், வேறு வழியின்றி எதிரிகளுக்கு பயந்து தற்கொலை முடிவை தேடிக்கொண்டார்.
இன்று யாருக்குத்தான் கோபம் வரவில்லை?
குழந்தைகள் கூட கோபம் கொள்கிறார்கள். கேட்கின்ற பொருட்களை பெற்றோர் வாங்கித்தரவில்லை என்றால், கீழே உருண்டு, புரண்டு அழுகிறார்கள். கோபத்தின் வெளிப்பாடான அந்த அழுகையின் மூலம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
குழந்தைகளுக்கே கோபம் வரும்போது பெரியவர்களுக்கு வராதா என்ன?
எல்லோருமே கோபப்படுகிறோம். அந்த கோபத்தின் விளைவால் ஏற்பட்ட நிகழ்வுகளுக்காக பின்னர் வருந்துகிறோம்.
பெண்களைக் காட்டிலும் ஆண்கள்தான் அதிகம் கோபப்படுகிறார்கள். அதனால், உடல்நல பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாகுபவர்களும் அவர்கள்தான் என்கின்றன ஆய்வுகள்.
`ஆம்பிளை என்றால் கோபம் வரத்தான் செய்யும். கோபம் வரவில்லை என்றால் அவன் ஆம்பிளை இல்லை’ என்கிற எழுதப்படாத சட்டம் பழங்காலம் தொட்டு இன்றும் கூறப்பட்டு வருகிறது.
ஆண்களுக்கு மட்டும்தான் கோபம் வர வேண்டுமா? ஏன்… பெண்களுக்கு கோபம் வராதா? என்று சிலர் கேட்கலாம்.
நிச்சயம் எல்லோருக்கும் கோபம் வரத்தான் செய்யும். பெண்கள், தங்களுக்கு வரும் கோபத்தை சட்டென்று வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களுக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொள்கிறார்கள். ஆண்கள் அப்படியல்ல; உடனே கை நீட்டிவிடுகிறார்கள். அல்லது, ஏதாவது ஒரு
எதிர்விளைவை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
காரணம், சமுதாயச்சூழல் அப்படி!
பெண் என்றால் ஆணை எதிர்த்து பேசக்கூடாது; தலை குனிந்துதான் நடக்க வேண்டும்; கணவனோ, தந்தையோ, சகோதரனோ-அவன் என்ன சொல்கிறானோ, அதைத்தான் ஒரு வீட்டில் உள்ள பெண் கேட்டு நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள் காலம் காலமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.
இப்படிச் சொல்வதால் பெண்கள் கோபப்பட மாட்டார்கள் என்று அர்த்தம் கிடையாது. அவர்களும் கோபப்படத்தான் செய்கிறார்கள். ஆண்களையும், பெண்களையும் ஒப்பிடும்போது ஆண் தான் அதிகம் கோபப்படுகிறான்.
ராமையாவுக்கு அதிகம் கோபம் வராது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் மனைவியுடன் விட்டுக்கொடுத்து போய்விடுவார். இது, அவர் பணிபுரியும் அலுவலகத்துக்கும் தெரியும்.
ஒருநாள் அவரை இந்த விஷயத்தில் உசுப்பேற்றி விட்டுவிட்டார்கள் சக ஊழியர்கள். `ஆண் என்றால் கோபப்பட வேண்டும். கோபம் இல்லாதவனுக்கு எல்லாம் எதுக்கு மீசை?’ என்று கேட்டு, மீசையை முறுக்கிக்கொண்டிருந்த ராமையாவை சினம் கொள்ளச் செய்துவிட்டார்கள்.
`இன்னிக்கு எப்படியாவது மனைவியிடம் கோபமாக பேச வேண்டும்’ என்ற ஒரு தீர்க்கமான முடிவோடு வீட்டுக்குச் சென்றார்.
வீட்டுக்கு வந்ததும், களைப்பில் வந்த அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, அதற்கு அடுத்ததாக காபி எல்லாம் கொடுத்து உபசரித்தாள் அவரது மனைவி.
மனைவி மீது கோபம் கொள்வதற்கு காரணம் கிடைக்காததால் மசமசவென்று கையை பிசைந்து கொண்டிருந்தார்.
எதையாவது அடித்து உதைத்தால் கோபத்தை வெளிப்படுத்தலாம் என்று கணக்குப்போட்ட அவரது பார்வை ஜன்னலில் இருந்த எண்ணெய் பாட்டிலை மேய்ந்தது.
`பாட்டில் நன்றாகத்தானே இருக்கிறது? அதை வைத்து என்ன செய்ய முடியும்?’ என்று சில நொடிகளை யோசனையில் ஓடவிட்டவர், சட்டென்று அந்த பாட்டிலை தட்டிவிட்டார்.
பாட்டில் கீழே விழுந்து உடைந்த சத்தம் கேட்டு அவரது மனைவி அங்கே ஓடி வந்தாள்.
`என்னங்க ஆயிற்று? எண்ணெய் பாட்டில் உடைந்து கிடக்குது?’ என்று கேட்டாள்.
`என்ன… என் கிட்டேயே கேள்வி கேக்குறீயா? பாட்டிலை எங்கே வைக்கணும்ன்னு ஒரு வரைமுறை வேண்டாம்? ஜன்னல்ல வெச்சா கீழே விழுந்து உடையாம என்ன செய்யும்?’ என்று வார்த்தைகளை வேகமாக கொட்டியவர், `ஆமா… நாம பேசுறத காது கொடுத்து கேட்கிறாளா? இல்லையா?’ என்று தெரிந்துகொள்ள, மனைவி பக்கம் லேசாக பயந்துகொண்டே திரும்பினார்.
புயலுக்கு முன் அமைதி என்பார்களே; அப்படியொரு மாற்றம் அவர் மனைவி முகத்தில் தெரிந்தது.
`நம்ம கோபம் கொஞ்சம் ஓவர்தான். இன்னிக்கு இதோட நிப்பாட்டிக்குவோம். இதுக்குமேலே போனா, வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை சாத்தினாலும் சாத்திக்குவா. அப்புறம், நம்ம பாடு திண்டாட்டமாயிடும்!’ என்று கருதி, தனது கோபத்தை அந்த அளவில் முடித்துக்கொண்டார் ராமையா.
அன்று இரவு முழுவதும் அவரது மனைவி அவரிடம் பேசவேயில்லை.
`ரொம்பவும் சைலண்டா இருக்காளே; ஆப்பு எதுவும் வைக்கப்போறாளோ?’ என்ற கிலியும் அவரை தொற்றிக் கொண்டது.
மறுநாள் காலையில் மதிய சாப்பாட்டை டிபன் பாக்ஸில் அள்ளித் திணித்து கொடுத்து அனுப்பினாள் ராமையாவின் மனைவி.
அலுவலகத்திற்கு வந்தவுடன், மனைவியிடம் தான் கோபப்பட்ட விஷயத்தை சக ஊழியர்களுடன் பெருமையாக பகிர்ந்துகொண்டார்.
அப்போது, `அண்ணே… இன்னிக்குத்தான் உங்க மீசைக்கே ஒரு பவர் வந்திருக்கு’ என்று உசுப்பிவிட்டார், அவருக்கு கீழே பணிபுரியும் ஊழியர் ஒருவர்.
`டேய்… அது உனக்கு இன்னிக்குத்தாண்டா தெரியும். அண்ணன் எப்பவுமே இப்படித் தாண்டா!’ என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்டார்.
மதியநேரம் வந்தது. சாப்பாட்டு அறையில் டிபன் பாக்ஸை திறந்து, சாதத்தை வாயில் வைத்தார். வாயில் வைத்ததோடு சரி; அதற்குமேல் சாப்பாடு உள்ளே போகவில்லை.
உப்பு, காரம் எல்லாம் தூக்கலாக, ஒருமாதிரியான கலவையில் அன்றைய சாதம் இருந்தது.
`நேற்று நாம வெச்ச வேட்டுக்கு, இன்னிக்கு ஆப்பு வெச்சிட்டாளே…!’ என்று மனதுக்குள் புலம்பிய ராமையாவின் கண்கள் சிவந்துபோய் இருந்தன. லேசாக கண்ணீர்த் துளிகளும் எட்டிப்பார்த்திருந்தன.
கோபம் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் வரும்தான். ஆண்கள் கோபத்தை வெளிப்படுத்தினால் பதிலுக்கு பெண்களும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இது, நேரடியாக இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு வகையில் வெளிவந்தே தீரும். ராமையாவும் அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்தான்.
சுவரில் எறிந்த பந்து திரும்பி வரும் அல்லவா? அதுபோன்றதுதான் கோபமும்!
நாம் எந்த அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்துகிறோமோ, அதே அளவான எதிர்விளைவு நிச்சயம் உண்டு.
கோபப்படும்போது வாழ்நாள் சதவீதம் குறைவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உண்மை இப்படி இருக்கும்போது நாம் ஏன் கோபப்பட வேண்டும்? ஏன்… அடுத்தவர்களையும் கோபப்படுத்த வேண்டும்?
பணியாளர்களிடம் கோபப்பட்டால்தான் வேலை வாங்க முடியும் என்று சிலர் கருதுகிறார்கள். அப்படி கருதுபவர்கள் நாளடைவில் தங்கள் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரிடமும் கோபப்பட ஆரம்பித்து விடுகிறார்கள். கூடவே, பிரச்சினைகளையும் தேடிக் கொள்கிறார்கள்.
கோபம் இல்லாமல் அன்பாலும் வேலை வாங்க முடியும்.
அந்த அன்பால்தான் எதையும் சாதிக்க முடியும்.
இந்த உண்மையை புரிந்துகொண்டால், கோபத்திற்கு நிரந்தரமாக குட்-பை சொல்லி விடலாம்!