மாங்கனிகள் தொட்டிலில் தூங்குதடி அங்கே.. என்று ஆண் பாட..
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற என்று பெண் பாடுகிறார்..
வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. என்று ஆண் தொடர
நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்..
என்று பெண் முடிக்கிறார்.
மேற்படி திரை இசைப்பாடலை சிறிய வயதில் கேட்ட போது..
மாங்கனிகள் தொட்டிலில் தூங்குமா என்ற எந்தச் சிந்தனையும் இன்றி அங்கு சொல்லப்பட்ட மாங்கனியை அப்பாவித் தனமாக மாம்பழமாகவே எண்ணிக் கொண்டு.. இந்தப் பாடல் வரிகளுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள் புரியாமல்.. ஒரு விளக்கமும் இன்றி பாடலின் இசையால் கவரப்பட்டு அதை முணுமுணுத்துத் திரிந்த போது, அம்மா திட்டியதும்.. திட்டுக்கு அர்த்தம் புரியாமல்.. திட்டு அடியாக விழுந்திடுமோ என்ற பயத்தில் முணுமுணுப்பை கைவிட்டதும் இப்போ மீண்டும் ஞாபகத்திற்கு வந்து போகிறது.
சமீபத்தில் இந்தப் பாடலை மீண்டும் தற்செயலாகக் கேட்கப் போக.. அதேன் மாங்கனியை தொட்டிலில் தூங்க விட வேண்டும் என்ற ஆராய்ச்சிக் கேள்வி… மூளையில் வந்து தொலைத்தது. அதை ஏன் ஒரு ஆண் பாட வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.
அது இப்போ.. விடையாக வில்லங்கத்தனமான ஒரு பதிலைத் தந்திருக்கிறது. அதனை நேரடியாக இங்கு எழுத முடியாத அளவுக்கு அதற்குள் வில்லங்கத்தனம் ஒளிந்திருக்கிறது என்று நினைக்கும் போது.. அதிர்ச்சியாகவும் இருக்கிறது… வியப்பாகவும் இருக்கிறது.
எவ்வளவு பெரிய ஆபாசத்தை.. வானலைகளில் எந்தக் கத்தரிப்புக்களுக்கும் இடமின்றி கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்களே இந்தச் சினிமாக்காரர்கள்.. என்று எண்ணும் போது அவர்களின் திறமையை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை.
சினிமாக்காரர்களை விடுவோம்.. அது அவர்களின் தொழில்.. அட தமிழ் சினிமா ரசிகர்களைப் பார்த்தால்.. இவ்வளவு மட்டமான பாடல்களையா கேட்டு ரசித்துக் கொண்டு ஆங்கிலப் பாடல்கள் வெளிப்படையாக சொல்லும் ஆபாசத்துக்கு முகம் சுழிக்கின்றனர் என்று நினைக்கும் போது.. அடப்பாவிப் பசங்களா என்று அங்கலாய்க்கவே முடிகிறது.
இந்தப் பாடலில் இந்த ஒரு வர்ணனையே.. இந்த அளவுக்கு பெண்களை அவர்களின் அங்கங்கள் தொடர்பில் ஆபாசத்தனமாக வர்ணிக்கும் நிலை இருக்கும் போது.. எம்மை அறியாமலே.. இதையா சிறுவயதில் வாயில் முணுமுணுத்துத் திரிந்தோம் என்று நினைக்கும் போது ஒரு வித குற்ற உணர்வே மேலிடுகிறது.
இதற்கு மேல் இந்தப் பாடல்கள் வரிகள் தொடர்பில் என்னால் அதிகம் விபரித்து எழுத முடியாதிருக்கிறது. ஏனெனில்.. எமது சமுதாய கட்டமைப்பில் இது கூரிய கத்தியின் மேல் நடப்பது போன்றது. ஆனால் இந்தச் சமுதாயமா இப்படியான பாடல்களை வரவேற்று ரசித்து வருகிறது என்று எண்ணும் போது.. இவர்களின் போலி முகத்திரைகள் கிழிந்து சுக்கு நூறாகி விழுவதையே என் மனக் கண் காண்கிறது.
இதனை விட வெளிப்படையாகவே ஆபாசத்தை ஆபாசமாக இனங்காட்டும் ஆங்கிலப் பாடல்கள் எவ்வளவோ மேல். இலகுவாக இதுதான் ஆபாசம் என்று இனங்கண்டு தவிர்க்க வேண்டியதை தவிர்க்கலாம்.. எடுக்க வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம் அங்கு.
ஆனால் தமிழில் இந்த வகைப் பாடல்களைக் கேட்டு.. குழந்தைகள் முதல் தாத்தாக்கள் வரை தலையாட்டுவதற்கு ஆட்டம் போடுவதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் அல்லவா இருக்கின்றன. அதனை விளங்கிக் கொள்ள இத்தனை ஆண்டுகள் செல்ல வேண்டி ஏற்பட்டிருக்கிறது.
ம்ம்ம்.. அந்த வகையில் இது தமிழ் சினிமாத் துறையின் சாதனை என்று கூடச் சொல்லலாம்.தமிழ் சினிமாவே.. தனி வகைதான்..! வாழ்த்துக்கள் தமிழ் சினிமா ஆபாசத்துறை..!
Source: http://kundumani.blogspot.com