உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்டு முதல் நாளும், முதல் வாரமும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு தாய்ப்பால் வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும், ஈடு இணையற்றதும் தாயின் பாலாகும். தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவை நெருக்கமாக்கு வதும் தாய்ப்பால்தான்.
உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றhன மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகின்றன. இயற்கையின் படைப்புகளில், விந்தைகளில், நியதிகளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று* எனவேதான் நாம் பாலுட்டி இனத்தைச் சார்ந்தவர்களாகப் பகுக்கப்படுகின்றோம்.
பொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது. எங்காவது ஆடு, பசுவின் பாலைப் பருகுகின்றதா? கழுதை குதிரைப்பாலைக் குடிக்கிறதா? இந்த எல்லா உயிரினங்களிலும் நாம் மட்டுமே மற்ற விலங்குகளின் பாலை விலை கொடுத்து வாங்கிக் குடிக்கின்றேhம். குறிப்பாக அந்தந்த இனத்தின் தேவைக்கேற்ப அந்தந்தப்பால் அமைந்துள்ளது என இயற்கை விதியினை மறந்து புறக்கணிக்கின்றேhம்.
தாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டிற்கே பொருளாதாரப் பொக்கிஷம். குழந்தைகளை நோய்களிலிருந்து தாய்ப்பால் காப்பதுடன் குடும்பச் செலவுகளையும் குறைக்கின்றது. மூன்று மாதக் குழந்தைக்குப் பால் பவுடர் வாங்கினால் மாதத்திற்கு குறைந்தது ரூபாய் 450 ஆகும். நமது நாட்டில் ஏறக்குறைய 10 கோடி தாய்மார்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனர். இவர்கள் கொடுக்கும் தாய்ப்பாலின் மூலதனம் ரூபாய் 6500 கோடியாகும்.
இந்த புட்டிப்பால் பழக்கங்களால் குழந்தை களுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கைத் தடுக்க நேரும் செலவு ரூபாய் 176 கோடியாகும்.
தந்த பசி தனையறிந்து முலையமுது தந்து முதுகு தடவிய தாயார்††என அருணகிரிநாதர் தாயின் அன்பினை அவள் குழந்தைக்குப் பால் ஊட்டுவதன் முக்கியத்தின் வாயிலாகப் பாடி யுள்ளார். சீர்காழியில் குளக்கரையில் ……தன் தந்தையைக் காணாமல் தன்னந்தனியே அழுது தவித்துக் கண்களைக் கசக்கிக் கொண்டிருந் தான் ஆளடையப்பிள்ளை†† என்ற ஒரு சிறுவன். அவன் அழுகுரலைக் கேட்டவுடன் மனம் பொறுக்காத உமாதேவியார் அழுகின்ற பிள்ளை மீது அன்பு கொண்டு அணைத் தெடுத்துத் தமது திருமுலைப்பாலை ஊட்ட அச்சிறுவனே பின்னாளில் திருஞான சம்பந்தரானதாக நாம் பெரிய புராணத்தில் படிக்கின்றேhம்.
ஆனால் இன்று, தங்கள் உடல் அழகைப் பேணவேண்டும் என்ற சுய நலத்தோடு, தங்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்காத பெண்களும், இயல்பாகவே பால் சுரப்பு இல்லாத சில அம்மாக்களும், அப்படியே சுரந்தாலும் குழந்தையின் முழுத் தேவைக்கும் பால் இருப்பதில்லை என்பதும், இன்னும் சிலருக்குச் சீக்கிரமே பால் வற்றி விடுவதும் நாம் காணுகின்றோம்.
ஏன் இந்த அவலநிலை? பெண்கள் கர்ப்பகாலத்தில் சத்துள்ள உணவுகளை நிறைவாகச் சாப்பிடாவிட்டால் பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சினை ஏற்படும். முக்கியமாக ரத்தச் சோகை, புரதச் சத்துக்குறைவு, கால்சியம் பற்றhக்குறை உள்ள பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்காது. பிரசவம் நெருங்கும் சமயங்களில், பிரசவித்த முதல் ஒரு வார காலத்திலும், தாய்க்குச் சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் தாய்ப்பால் சுரப்பது குறையும். தாய்ப்பால் சுரப்பதன் சூட்சுமம் தாயிடம் மட்டுமில்லை, குழந்தையிடமும் உள்ளது என்பதை ஒவ்வொரு தாயும் உணர வேண்டும்.
தாய்ப்பால் எளிதில், வெதுவெதுப்பான சூட்டில் தேவைப்படும் போதெல்லாம் குழந்தைக்குக் கிடைக்கக் கூடியது. கலப்படம் செய்ய முடியாதது. உயர்தரப் புரதம், கொழுப்பு, அமினோஅமிலங்கள், தாது உப்புக்கள் மற்றும் லேக்டோ பேசிலஸ் பைபிடஸ்பேக்டர் போன்ற தடுப்புப் பொருட்கள் இவை அனைத்தையும் கொண்ட குழந்தையின் முதல் மூன்று மாதங்களுக்கான ஒரு முழுமையான உணவு.
தாய்ப்பால் தங்கநகை போன்றது, பிற வகை பால்கள் கவரிங் நகை போன்றவை. தாய்ப்பால் குழந்தைக்காக ஆண்டவன் அளித்த அருட்பிரசாதம். தாய்ப்பால் குடிப்பது குழந்தைகளின் பிறப்புரிமை, அதை கொடுக்க வேண்டியது தாயின் கடமை. இனியும் கொடுக்காமல் இருப்பது மிகவும் கொடுமை.
டாக்டர் கே.ஏ.மோகனதாஸ்