Home » கொறிக்க... » தபூ சங்கர் பக்கம் » கிளியோபாட்ரா… மயிலோபாட்ரா!

கிளியோபாட்ரா… மயிலோபாட்ரா!

ஆறு வருடங்களுக்கு முன்பு, முன்னூறு மைல்களுக்கு அப்பாலிருந்து நான் இந்தக் கல்லூரிக்குப் படிக்க வந்த முதல் நாளே தெரிந்துவிட்டது, இந்தக் கல்லூரியைப் பற்றி வெளியே பரவிக்கிடக்கும் புகழைவிட நூறு மடங்கு அதிகமாக, இந்தக் கல்லூரிக்குள் உன் புகழ் பரவிக்கிடக்கிறது என்பது.
அதோ மகா வாசல் தெளிக்கிறாடா என்று ஒரு கும்பல் ஓடும். இதோ மகா கோலம் போடுறாடா என்று இன்னொரு கும்பல் ஓடும். டேய்… மகா ஸ்கூல் கௌம்பிட்டாடா என்று ஒரு கூட்டம் கூடும். அத்தனை யையும் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
கல்லூரியெங்கும் அழகழகாய் பெண்கள் சுற்றிக்கொண்டிருக்கையில், இந்தக் கல்லூரியே ஸ்கூல் படிக்கும் ஒரு பெண் பின்னால் சுற்றுகிறது என்றால், அப்படியென்ன கிளியோபாட்ரா அவள்? என்று எனக்குள் கேட்டுக்கொண்டு… அதையும்தான் பார்த்துவிடுவோமே!ՠஎன்று உன்னைப் பார்க்கக் கிளம்பினேன்.

கல்லூரி பெண் பேராசிரியர் ஒருவரின் மகள்தான் நீ என்பதையும் கல்லூரிக்குள்ளேயேதான் உன் வீடிருக்கிறது என்பதும் தெரிய வர, நீ ஸ்கூல் கிளம்பும் தரிசனத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த எங்கள் சீனியர் கூட்டத்துக்குப் பின்னால் ஜூனியர்கள் நாங்கள் சேர்ந்துகொண்டோம்.
உன்னைப் பார்த்தவுடன், எலேய்… இவ வெறும் கிளியோபாட்ரா இல்லடா… பஞ்சவர்ணக்கிளியோபாட்ரா என்று கிசுகிசுத்தபடி உன் பின்னா லேயே போனது எங்களில் ஒரு கூட்டம். கிளியா இது? மயில்டா… மயிலோபாட்ரா என்று கிறங்கியபடி மிச்சக் கூட்டமும் உன் பின் தொடர்ந்தது.

எனக்கும் ஆசை. ஆனால்… ச்சே, இத்தனை பேர் சுற்றும் பெண் பின்னால் நாமும் சுற்றுவதா என்று ஒரு சின்ன ஈகோ.  அதற்காக உன்னைப் பார்க்காமல் இருக்க முடியுமா என்ன? நீ வரும் போதும் போகும்போதும் ஒன்றும் உன்னைப் பார்க்கவில்லையே! என்பது மாதிரி உன்னைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால், அன்று திடீரென உன் அம்மா என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.
அந்தச் செய்தி கேட்டு கல்லூரியே கொதித்துப் போய்விட்டது. இதுக்குடா? என்றும் இப்படிடா? என்றும் என்னைக் குடைந்தெடுத்து விட்டார்கள் என் நண்பர்களும் சீனியர்களும்.
?உன் கையெழுத்து நல்லாருக்குன்றதால தான் உன்னைக் கூப்பிட்டேன். தினமும் சாயங்காலம் வந்து நான் எழுதற ப்ராஜெக்டைக் கொஞ்சம் காப்பி பண்ணித் தர்றியாப்பா? என்றார்உன் அம்மா.
மௌனமாகத் தலையாட்டினேன். ஆனால் மனசோ டேய், உன் கையெழுத்து மட்டுமில்ல.. தலையெழுத் தும் நல்லா இருக்கு! என்று குதித்தது. அதன் பிறகு வந்த நாட்கள்… உன்னை மிக மிக அருகில் பார்த்த நாட்கள்… எல்லாம் காதல் என்னைக் கட்டித் தழுவிய நாட்கள். ஆனால், எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல், கழிந்து போயின மூன்று வருடங்கள்.
படிப்பு முடிய முடிய, உன்னைக் காதலித்தவர் களெல்லாம் தங்களின் காதல்களைப் புதிதாக வந்தவர்களிடம் கொடுத்துவிட்டு வெளியேறி னார்கள். நீ எப்போதும் போலயாரையும் காதலிக்காமலேயே இருந்தாய். எனக்குப் படிப்பு முடிந்தபோது எல்லோரையும் போல என்னால் வெளியேறிவிட முடியவில்லை. அங்கேயே தொடர்ந்தேன். அங்கேயே ஒரு ஆசிரியர் வேலையும் வாங்கிக்கொண்டேன்.

இடையில் நீயும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு இந்தக் கல்லூரியிலேயே சேர்ந்தாய்.
உன் வீட்டை நான் கடக்கும்போது உன் அம்மா பார்த்துவிட்டால், உள்ளே அழைத்துப் பேசிக்கொண்டிருப்பார். அப்படியே போயின இரண்டு வருடங்கள்.
உனக்குக் கல்லூரிப் படிப்பு முடியப் போகிற ஒரு நாளில், உன் வீட்டுக்கு வந்து உன் அம்மாவிடம் தயக்கத்துடன் உன்னைப் பெண் கேட்டேன், தன்னந்தனி ஆளாக.
எதுவும் பேசாமல் என்னை ஒரு பார்வை பார்த்த உன் அம்மா, உள்ளே இருந்த உன்னை அழைத்து
உன்னைப் பெண் கேக்கறார்… என்ன சொல்ல? என்றார்.
நீயோ முடியாதுனு சொல்லிடுங்க என்று சட்டென உள்ளே போனாய். அடிபட்ட பறவைபோல சிறகொடிந்து போனேன். நான் கேட்டது தப்புனா என்னை மன்னிச்சுடுங்க என்று உன் அம்மாவிடம் சொல்லிவிட்டு எழுந்தேன்.

நில்லுப்பா என்ற உன் அம்மா, என்ன பையன்ப்பா நீ… உன்னை என் பொண்ணு காதலிக்க ஆரம்பிச்சு நாலு வருஷம் ஆகுது. அவளுக்குக் கெடைச்ச டாக்டர் ஸீட்டைக்கூட வேண்டான்னுட்டு அவ இங்க படிக்கிறதே உனக் காகத்தான்…? என்றார். ஒரு கோடி கிதார் நரம்புகள் ஒரே நேரத்தில் மீட்டப்பட்டது போலிருந்தது எனக்குள். ஏம்மா… அவருக்கும் என்னைப் பிடிக்குமாம்மா..??னு ஆயிரம் தடவைக்கு மேல எங்கிட்ட கேட்டுட்டா. அவகிட்டே இன்னும் நீ உன் காதலையே சொல்லாம, திடீர்னு கல்யாணத்தைப் பத்திப் பேச வந்தா, அவளுக்குக் கோபம் வராதா பின்னே? என்று சிரித்தார் உன் அம்மா.

பரவசமாய் ஓடிவந்து உன் முன் நின்றேன். இத்தனை வருஷமா என்னை ஏன் தவிக்கவிட்டீங்க? என்று அழுதாய்… அடித்தாய். நான் உன் விரல் பற்றினேன். என் ஆறு வருடக் காத்திருப்பும் உன் காலடியில் நொறுங்கியது. உன் கண்ணீர் அதை ஆசீர்வதித்தது!

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்
அந்தச் சீப்போ
உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

பழக்கடைக்குள் நுழைந்த நீயோ
ஆப்பிள்ளைக் காட்டி
இது எந்த ஊர் ஆப்பிள்?
அது எந்த ஊர் ஆப்பிள்? என்று
கேட்டுக்கொண்டிருந்தாய்.
ஆப்பிள்கள் எல்லாம் ஒன்றுகூடிக்
கேட்டன
நீ எந்த ஊர் ஆப்பிள்?

தபூ சங்கர்-

Leave a Reply