Home » கொறிக்க... » தபூ சங்கர் பக்கம் » கடவுளைக் கொஞ்சம் கண்டித்து வை!

கடவுளைக் கொஞ்சம் கண்டித்து வை!

எப்போதும்போல நேற்றிரவு உன் கனவுக்காகத் தூங்கியபடி காத்திருந்தேன். ஆனால், நீ வருவதற்கு முன், எப்படியோ என் கனவுக்குள் நுழைந்துவிட்ட கடவுள், என்னைப் பார்த்து, குழந்தாய்… உனக்கு என்ன வேண்டும்? என்று அவருக்கே உரிய தோரணையுடன் கேட்டார்.

எனக்கோ கோபம் தலைக்கேறி, யார் நீ? உன்னை யார் என் கனவுக்குள் அனுமதித்தது? உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு என்ன வேண்டும் என்பதை என்னைக் கேட்காமலே எனக்கு வாரி வழங்குகிற தேவதை ஒருத்தி இருக்கிறாள். வெளியே போ! அவள் வருகிற நேரமிது என வெடுக்கென்று சொல்லிவிட்டேன்.

உடனே கடவுளுக்குக் கோபம் வந்து, என்னை எரிக்கப் பார்த்தார். உன் அரவணைப்பில் இருக்கும் என்னை எரித்துவிட முடியுமா அவரால்? தன் வரலாற்றில் ஏற்பட்ட முதல் தோல்வியை மறைக்க முடியாமல், முகம் எல்லாம் வேர்த்துக்கொட்ட, மறைந்துவிட்டார் கடவுள்.

ஆனாலும் இந்தக் கடவுளுக்கு கர்வம் அதிகம். எல்லோருக்கும் எல்லாமும் நாம்தாம் என்கிற நினைப்போடு சுற்றிக்கொண்டிருக்கிறார். அவர் பிறருக்கு வேண்டுமானால் எல்லாமுமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், எனக்கு எல்லாம் நீதான்!

இந்தக் கடவுள் உன்னிடம் வந்தால் அவரைக் கொஞ்சம் கண்டித்து வை, ?என்னவருக்கு என்ன வேண்டும் என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.இனி அவரைத் தொந்தரவு செய்யாதே! என்று.

தெய்வமே,
உன்னை என் இதயத்திலிருந்து
வெளியேற்றிவிட்டு,
ஒரு பெண்ணைக்
குடிவைத்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
என்னைக் கைவிட்டு விடாதே!

உன்னால்
தூணிலோ, துரும்பிலோகூட
வாசம் செய்ய முடியும்.
அவளால் முடியுமா?

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது|
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!

இந்தா என் இதயம்.
அதை நீ
விளையாடும்வரை
விளையாடிவிட்டுத்தூக்கிப் போட்டுவிடு.

அது
அதற்குத்தான்
படைக்கப்பட்டது!

கர்ப்பக் கிரகம்
தன்னைத்தானே
அபிஷேகம் செய்து கொள்ளுமா என்ன?

நீ சொம்பில் நீரெடுத்து
தலையில் ஊற்றிக் குளித்ததைப்
பார்த்ததிலிருந்து
இப்படித்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
என்னை நானே…

யாராவது
ஏதாவது
அதிர்ச்சியான
செய்தி சொன்னால்
அச்சச்சோ என்று
நீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.
நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்!

தபூசங்கர்-

Leave a Reply