Home » கொறிக்க... » தபூ சங்கர் பக்கம் » காதல் ஜல்லிக்கட்டு..!

காதல் ஜல்லிக்கட்டு..!

மார்கழி மாதக் கோலத்துக்குச் சூட்டுவதற்காக என் அம்மா உன் வீட்டில் பூசணிப் பூ வாங்கிவரச் சொல்லுவார்.

நான் வாங்க வரும்போது, நீ என் அம்மாவுக்கு இரண்டு பூசணிப் பூக்களும், எனக்கு ஒரு புன்னகைப் பூவும் தருவாய். என்னிடமிருந்து படிப்பதற்காக வாங்கிப் போகும் வார இதழ்களில் இருக்கும் ஆடைக்குறைவான பெண்களுக்கு ஆடை வரைந்து திருப்பிக் கொடுப்பாய்.

பொங்கலன்று… நாங்கள் கட்டிக் கொண்டிருந்த புது வீட்டைப் பார்க்க வருமாறு உன்னை அழைத்தேன். நீயும் வந்தாய். வீட்டின் ஒவ்வொரு அறையாக உனக்குக் காட்டிவிட்டு, என்னுடைய அறை இருக்கும் இடத்துக்கு உன்னை அழைத்து வந்தேன்.

அதில், அப்போதுதான் தரைப் பூச்சு முடிந்திருந்தது. நான் வெளியே நின்றுகொண்டு, இதுதான் என் அறை. உள்ளே போய்ப் பார்!ՠஎன்றேன்.

உள்ளே காலடி எடுத்து வைத்த நீ, உன் பாதம் ஈரத்தரையில் பதிந்ததைப் பார்த்துவிட்டு, அச்சச்சோ… என்று பதறினாய்.

பதறாதே… உன்னை அழைத்து வந்ததே அதற்குத்தான்! என்றேன்.

நீ வெட்கத்தைக் கொட்டிவிட்டு ஓடிப் போனாய். உன் வெட்கத்தில் என் வீடு சுபிட்சம் அடைந்தது. ஆனால், அடுத்த நாள் நடந்த ஜல்லிக்கட்டில்… இந்தக் காளையை அடக்குபவருக்குத் தான் என் பெண்! என்று உன் தந்தை அறிவித்ததைக் கண்டு, நான் பதறிப் போனேன்.

நீ வளர்த்த அந்தக் காளையை அடக்க, யார் யாரோ பாய்ந்தார்கள். ஆனால், அனைவரை யும் புரட்டி எடுத்து விட்டது உன் காளை!

கடைசியில், நான் இறங்கப் போனேன். நீ கொஞ்சம் பொறு! என்று ஜாடை செய்துவிட்டு, உன் ரிப்பனில் ஒன்றை உருவி, ஒரு சிறுமியிடம் கொடுத்து அனுப்பினாய், ரகசியமாக!

அதை வாங்கிக்கையில் கட்டிக்கொண்டு இறங்கிய என்னிடம் உனது காளை அடங்கிப்போனது! அது உன் வாசத்துக்குக் கட்டுப்பட்டது என்பதை அறியாமல், என் வீரத்தை மெச்சினார்கள் ஊர்மக்களும் உன் அப்பனும்!

என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ

நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்…
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது

நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை
காதல்
என்னை விளையாடிக்
கொண்டிருக்கும்.

நான்
உன்னைக் காதலிக்கிறேன்.
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது

என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.

தபூசங்கர்-

Leave a Reply