முதலிரவு…
திருவிழாவுக்குப் பிறகு தேவதை நீ தூங்கிக்கொண்டு இருந்தாய். நான் உறங்க மறந்து உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு பெண். அதுவும் என் பிரியத்துக்குரிய பெண் தூங்குவதை, அதுவும் என் படுக்கையில் தூங்குவதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
மணப்பெண்ணாக உன்னைப் பார்த்த போதோ, உனக்கு மாலை இடும்போதோ, தாலி கட்டும்போதோ, முதல் முறையாக உன் விரல் பிடித்து தீயை வலம் வரும் போதோ அல்லது குடத்தில் மோதிரம் எடுக்கும் சடங்கில் உனக்கு மோதிரத்தை விட்டுக் கொடுத்தபோதோ, அதற்காக ஓரக்கண் ணால் நீ என்னைப் பார்த்த அழகிய பார்வையின்போதோதான்… நான் உன்னைக் காதலிக்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்றாலும், இப்போது உன் துயிலைப் பார்க்கிறபோது… ஏதோ நூறாண்டுகளாக உன்னை நான் காதலிப்பதைப் போல நெஞ்சு முழுவதும் பொங்கி வழிந்தது காதல்.
நீயோ அழகுகளை எல்லாம் காவலுக்கு வைத்துக்கொண்டு ஒரு மகாராணியைப் போல் தூங்கிக்கொண்டு இருந்தாய். நானோ உன் உறக்கத்துக்குள் நுழைய முடியாத கனவு போல் வெளியே அமர்ந்திருந்தேன், வெகுநேரம்!
எங்கோ ஒரு சேவல் கூவியது. நீ விடியற்காலையில் எழுகிற பழக்கம் உடையவளாக இருந்தால், விழித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் என்னைப் பார்த்தால் என்ன நினைப்பாயோ என்கிற எண்ணத்தில் படுக்கப் போகையில், உன் ஒரு கையைத் தூக்கி என் மடியில் போட்டாய். உனது கையை விலக்கிவிட்டுப் படுத்துக்கொள்ள மனமின்றி அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தேன். என் மடியோ, உன் கை தூங்கும் குட்டித் தலையணையாக மாறிப்போய் இருந்தது.
சற்றே நீ புரண்டு படுக்கையில்… கால்புறத்தில் கொஞ்சம் விலகிய உன் ஆடையைச் சரி செய்தேன். அவ்வளவுதான்… இதுவரை விம்மிக் கொண்டிருந்த ஆனந்தம் வெடித்து, கண்ணீராய்ப் பூத்தது என் கண்களில்.
போதும்… இத்தனை வருடமாகப் பெரும்பாடுபட்டுக் கடைப்பிடித்த என் பிரம்மச்சரியத்துக்குப் பரிசாக தேவதைகளின் தேவதையை அனுப்பி வைத்த என் தெய்வமே… போதும் உன் கருணை!
உன் குதிகாலை மையமாக வைத்து
ஒரு சுற்றுச் சுற்றி
கட்டை விரலால்
மண்ணில் நீ போடும் அழகு வட்டத்தில்…
குழந்தைகள் போனபிறகு
குடியிருப்பவன் நான்.
உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.
தபூ சங்கர்-