Home » கொறிக்க... » தபூ சங்கர் பக்கம் » மன்னிப்பும் அன்பளிப்பும்!

மன்னிப்பும் அன்பளிப்பும்!

நீயும் நானும் காதலும் யாரும் யாரிடமும் எதுவும் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டு இருந்த காலத்தில்… நீ புதிய உடை அணிந்து வருவாய். ?புது டிரெஸ் நல்லா இருக்கா?? என்று கேட்கத் துடிக்கும் உன் உதடுகள். ஆனால், அதை உன் விழிகள் கேட்கும். உன் கொலுசுகளை அனுப்பிக் கேட்பாய். உன் வளையல்களைக் குலுக்கி விசாரிப்பாய். ஏன் உன் புதிய உடையையே சரசரக்கவிட்டுக் கேட்டுப் பார்ப்பாய்.

ஆனால், நானோ மாலை வரை மவுனமாகவே இருந்துவிட்டு, சாவகாசமாக புது டிரெஸ் நல்லாருக்கு என்பேன். அப்போது நீயோ, நான் கேட்டேனா? என்பாய் அநியாயமாய்.

பின்ன என்ன… உடனே சொல்ல வேண்டியதுதான நீ என்றாய் பிறகொரு நாளில்.

ஏன்… நீ கேட்க வேண்டியதுதானே, உன் வாய் திறந்து! என்றேன்.

ஆமா, நீ என்னைக் காதலிக்கிறாயா இல்லையானே தெரியாம உன் முன்னாடி வந்து நின்னு அசடு மாதிரி, ?புது டிரெஸ் நல்லாருக்கா??னு கேப்பாங்களாக்கும் என்றாய்.

அப்ப… நல்லாயிருக்குனு சொன்ன நான் இளிச்சவாயனா? என்றேன் கோபமாக.

கோச்சுக்காதடா… வேணும்னா நான் ஸாரி கேட்டுக்கறேன் என்றாய்.

கேளு! என்றேன்.

மன்னிச்சுக்கடா… மச்சான் என்றாய் ஸ்டைலாக.

அடிப்பாவி! புது டிரெஸ் நல்லாருக்கானு நீ வாயாலயா கேட்டே? கண்ணைக் காட்டி, கையைக் காட்டித் தானே கேட்டே. அந்த மாதிரி இப்போ மன்னிப்பும் உன் கன்னத்தால கேளு என்றேன்.

கன்னம் எப்படிக் கேட்கும்?

நீ கன்னத்தைக் காட்டு. கன்னமே கேட்டுக்கும் என்றேன்.

சிணுங்கியபடி கன்னம் காட்டினாய். நான் உன் கன்னத்தில் முத்தமிட்டேன்.

வெட்கப்பட்ட நீ,  இதுதான் மன்னிப்பா? அன்பளிப்பு மாதிரி இருக்கு! என்றாய்.

காதலில் அப்படித்தான்… மன்னிப்பு கூட அன்பளிப்பாகும்!

எந்த நாளை நீ பிரமாத மாகக் கொண்டாட நினைக் கிறாய்? என்றேன், நமக்குக் கல்யாணமான சில மாதங்கள் கழித்து.

இதிலென்ன சந்தேகம். நம் கல்யாண நாளைத்தான்! என்றாய் முகம் நிறைய மகிழ்ச்சியுடன். ஆனால், நாம் காதலிக்க ஆரம்பித்த நாளைத்தான் நான் பிரமாதமாகக் கொண்டாட நினைக்கிறேன் என்றேன்.

ஏன்… கல்யாண நாள் உனக்கு முக்கியமாகப் பட வில்லையா? கல்யாணம் அதற்குள் கசந்து விட்டதா உனக்கு? என்றாய் கோபத்துடன்.

ஐயோ! கல்யாணம் கசந்து போயிருந்தால், காதலித்த நாள் வெறுத்துப் போய் இருக்குமே. நான் காதலித்த நாளைப் பெரிதாகக் கொண்டாட விரும்புவதே, நம் கல்யாண வாழ்க்கை இனிப்பாக இருப்பதால்தானே! என்றேன்.

?எப்படிப்பா இப்படில்லாம் யோசிக்கறே?? என்றாய் என் தலையில் ஒரு செல்லக் குட்டுவைத்து.

ஒரு அழகான அலமாரி வேண்டும் என்றாய். வாங்கி வந்தபோது, அதை படுக்கை அறையில் வை என்றாய்.

எதுக்கு இந்த அலமாரி? என்றேன்.

ம்… ஒரு முக்கியமான நினைவுச் சின்னத்தை நீயும் நானும் மட்டும் பார்ப்பது மாதிரி இதில் வைக்கப்போகிறேன் என்றாய்.

அது என்ன அது? என்ற எனக்குப் பதிலே சொல்லாமல், Ԧamp;#2953;ன்னிடம் எனக்குப் பிடித்தது எது தெரியுமா? என்று கேள்வி கேட்ட நீயே, பதிலும் சொன்னாய்.

?என் அன்புக் கணவா! என் மார்பு உன் மீது படும்போதெல்லாம் நீ ஒரு பாட்டுப் பாடுவாயே… அது பிடிக்கும். அதே மார்பு தப்பித்தவறி வேறு எந்தப் பொருளின் மீது பட்டுவிட்டாலும், உடனே கோபம் வந்து அந்தப் பொருளைத் தூக்கிப்போட்டு உடைப்பாயே… அது ரொம்பப் பிடிக்கும். அப்படி நீ உடைத்த ஒரு பொருளை எடுத்து ஒட்டி வைத்திருக்கிறேன். அதை வைக்கத் தான் இந்த அழகான அலமாரி என்றாய்.

ஒரே ஒரு பொருளை வைப்பதற்கா இத்தனை பெரிய அலமாரி? நீ உடைப்பதற்காக இன்னும் பல பொருட்கள் இந்த வீட்டில் காத்திருக்கின்றனவே. என்று சிரித்தாய். பார்த்து… அந்த அலமாரி மேல சாஞ்சுடாத… அப்புறம் அதையும் உடைச்சுப் போட்டுடுவேன் ஏன் உன் மீதும்தான் சாய்கிறேன். அப்போ உன்னையும் உடைத்துவிடுவாயா?

அதுதான் நீ சாயும் ஒவ்வொரு முறையும் நான் உடைந்து உருகிவிடுகிறேனே!

கடவுளின் தரிசனத்துக்காக
தவமிருக்கும் முனிவர்கள் போல
உன்னைத் தரிசிப்பதற்காக
ஒரே இடத்தில் உட்கார்ந்து
தவமெல்லாம் இருக்க மாட்டேன்.
நீ எந்த மலையின் உச்சியில்
இருக்கிறாய் என்று சொல்…
ஒரு மலையேறும் வீரனைப் போல்
உன்னைத் தேடி வருகிறேன் நான்.

அய்யோ…
நீ கொடுத்த
பறக்கும் முத்தத்தைக்
காற்று தூக்கிக்கொண்டு ஓடிவிட்டதே!

உங்கள் எதிர் வீட்டு வாசலின்
திருஷ்டிப் பூசணிக்காய்க்கு
உன் மேல் ஒரு கண்போல.
உன்னைப் பார்க்கும்போது
அது தன் மீது வரைந்திருக்கும்
கர்ண கடூரமான முகத்தை
கமல்ஹாசன் முகம்போல
மாற்றிக்கொள்கிறதே.
 
தபூ சங்கர்-

Leave a Reply